தங்களிடம் இருந்து எதிரணிக்கு ஓடிய செந்தில் பாலாஜி இப்போது தி.மு.க.வுக்கு ஓடி உள்ளார். அவர் ஒரு அரசியல்வாதி அல்ல. நல்ல வியாபாரி என்று அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறினார்.
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தால் ஏற்பட்டுள்ள பதட்ட நிலை தணிக்கப்படும். ஸ்டெர்லைட் ஆலைக்கு பசுமை தீர்ப்பாயம் வழங்கிய உத்தரவுக்கு நமது முதல்வர் எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.
மேலும் இது குறித்து சுப்ரீம் கோர்ட்டுக்கு மேல் முறையீடு செய்யப்படும். கோர்ட்டின் தீர்ப்புக்கு பிறகு நிலைமை தெரியும். இது குறித்து முதல்வர் ஆராய்ந்து நல்ல முடிவை எடுப்பார்.
எங்களிடம் இருந்து எதிரணிக்கு ஓடிய செந்தில் பாலாஜி இப்போது தி.மு.க.வுக்கு ஓடி உள்ளார். அவர் ஒரு அரசியல்வாதி அல்ல. நல்ல வியாபாரி. ஆதாயம் எங்கு கிடைக்குமோ அங்கு ஓடுவது அவரது வழக்கம்.
பிளாஸ்டிக் பயன்படுத்துவது படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. அத்தியாவசிய தேவைகளுக்கு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் நடைமுறையில் இருக்கும். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் இந்த அரசு செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறினார்.