மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் பேரணி!

10967 0

கர்நாடக அரசு மேகதாதுவில் புதிய அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளித்தத்தை கண்டித்து தஞ்சையில் காவிரி உரிமை மீட்பு குழு சார்பில் இன்று பேரணி நடத்தினர். 

தஞ்சை சிவகங்கை பூங்காவில் இருந்து தொடங்கிய பேரணிக்கு காவிரி உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் தலைமை தாங்கினார்.

இதில் விடுதலை தமிழ் புலிகள் கட்சி நிறுவனர் குடந்தை அரசன் மற்றும் விவசாய சங்கத்தினர் மற்றும் பெண்கள், பல்வேறு அமைப்பை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்டோர் பேரணியில் கலந்து கொண்டனர்.

பேரணியில் கர்நாடக அரசு மேகதாதுவில் புதிய அணைகட்ட முயற்சிப்பதை கண்டித்தும், இதற்கு அனுமதி வழங்கிய மத்திய அரசை கண்டித்தும் கோ‌ஷங்களை எழுப்பினர். மேலும் கர்நாடக அரசை கண்டித்து எழுதப்பட்ட பதாகைகளையும் கைகளில் ஏந்திய படி சென்றனர்.

காவிரி படுகையை பாலை வனமாக்ககூடிய ஹைட்ரோ கார்பன், மீத்தேன், ஷேல் கேஸ் உள்ளிட்ட திட்டங்களை கைவிட கோரியும், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை திறப்பதற்கு அனுமதிக்கக் கூடாது, கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பாரபட்சமின்றி நிவாரணம் வழங்கவேண்டும் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி பேரணியாக சென்றனர்.

பிறகு பேரணி முக்கிய சாலைகள் வழியாக சென்று தஞ்சை தலைமை தபால் நிலையத்தை வந்தடைந்தது.

விவசாயிகளின் இந்த பேரணியையொட்டி ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

Leave a comment