நேபாளம் முன்னாள் பிரதமர் துல்சி கிரி மரணம்!

349 0

நேபாளம் நாட்டின் பிரதமராக இருமுறை பதவி வகித்த துல்சி கிரி(93) உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

இந்தியாவின் அண்டைநாடான நேபாளம் நாட்டின் பிரதமராக கடந்த 1964-1965 மற்றும் 1975-77 ஆண்டுகளுக்கு இடையில் இருமுறை பதவி வகித்தவர் துல்சி கிரி. சிராஹா மாவட்டத்தில் 1926-ம் ஆண்டில் பிறந்த கிரி, நேபாளி காங்கிரஸ் கட்சியில் இணைந்து தனது அரசியல் பணியை தொடங்கினார். 

பஞ்சாயத்து சட்டத்தின் தீவிர ஆதரவாளராக இருந்த இவர், நேபாளத்தின் மன்னராக பிரேந்திரா ஆட்சி செய்த காலக்கட்டத்தில் நாட்டைவிட்டு வெளியேறி இலங்கையில் அரசியல் தஞ்சம் அடைந்து, வாழ்ந்து வந்தார்.

பின்னர், மன்னர் கியானேந்திர ஷா ஆட்சிக்காலத்தில் கடந்த 2005-ம் ஆண்டு அவர் தாய்நாட்டுக்கு திரும்பினார். அப்போது, பிரதமர் பதவிக்கு நிகராக கருதப்படும் நேபாள மந்திரிசபையின் துணை தலைவர் பதவியில் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், சில ஆண்டுகளாக நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த துல்சி கிரி, புத்தானில்கன்ட்டா பகுதியில் உள்ள தனது இல்லத்தில் உடல்நலக் குறைவால் 93-வது வயதில் இன்று மரணம் அடைந்தார்.

அவரது மறைவுக்கு பிரதமர் சர்மா ஒலி,  முன்னாள் பிரதமர் ஷேர் பகதூர் டியூபா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Leave a comment