இணையத்தில் நூதன முறையில் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கத்தை இழந்த பெண்மணி கூகுள் சர்ச் அனுபவத்தை புலம்பி தவிக்கிறார்.
இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்பாட்டிற்கு அடுத்தப்படி இ-வாலெட் எனும் இணைய பணப்பரிவர்த்தனை முறை அதிக பிரபலமாகி வருகிறது. மத்திய அரசு டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் இ-வாலெட் சேவையை பயன்படுத்தி வந்த டெல்லியை சேர்ந்த பெண் கூகுள் சர்ச் செய்ததால் ஒரு லட்சம் ரூபாய் பணத்தை பறிகொடுத்திருக்கிறார். நூதன முறையில் நடைபெற்ற மோசடியில் சிக்கிய பெண் தன்னை அறியாமல் கொடுத்த தகவல்கள் அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் தேவையற்ற செலவாக மாறியிருக்கிறது.
தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் பெண்மணி தனது இ-வாலெட் சேவையில் முறையற்ற பணப்பரிமாற்றம் சார்ந்த குற்றச்சாட்டை தெரிவிக்க, சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொள்ள, பலரையும் போன்று கூகுள் உதவியை நாடியிருக்கிறார் அந்த பெண்.
அந்த வகையில் கூகுளில் கிடைத்த தொடர்பு எண்ணிற்கு அழைப்பு மேற்கொண்டு தனது புகாரை தெரிவிக்க துவங்கினார். மறுபக்கம் பேசியவர் பெண்ணின் குறைகளை தீர்க்கும் வகையில் பதில் அளிக்க துவங்கி, பேச்சுவாக்கில் பெண்ணின் கிரெடிட் கார்டு விவரங்களை கேட்டு அவற்றை குறித்து வைத்துக் கொண்டார்.
புகார் அளித்த பெண்மணி தனது பிரச்சனை சரியாகி விடும் என்ற நம்ப துவங்கியதும், அவருக்கான அதிர்ச்சி அழைப்பின்றி வந்து சேர்ந்தது. இ-வாலெட் சார்ந்த குற்றச்சாட்டு தெரிவித்தவரின் கிரெடிட் கார்டில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் திருடப்பட்டு இருந்தது. இ-வாலெட் சேவை பற்றிய கசப்பான அனுபவத்தை வெளியே கூறிய பெண், தான் தொடர்பு கொண்டு பேசிய எண் போலி என்பதை புரிந்து கொண்டார்.
கூகுள் சர்ச் ஆபத்தானது எப்படி?
டெல்லியை சேர்ந்த பெண் பணம் பறிகொடுத்த விவகாரத்தில் கூகுள் தரப்பில் பிழை எதுவும் கண்டறியப்படவில்லை. ஆனால் கூகுள் தேடலில் போலி மொபைல் நம்பர் தோன்ற கூகுள் மேப்ஸ் தான் காரணம். கூகுள் மேப்ஸ் சேவையில் தகவல்களை சரியாக வழங்கும் நோக்கில், பயனர்கள் தகவல்களை மாற்றும் வசதி வழங்கப்படுகிறது.
இந்த வசதியை பயன்படுத்தி, வங்கிகள், விற்பனையகங்கள் மற்றும் இதர நிறுவனங்களின் தொடர்பு விவரங்களை பயனர்கள் தங்களது மொபைல் நம்பரை மட்டும் கொடுத்து, மாற்றிவிட முடியும். கூகுள் வழங்கும் தகவல்களில் பிழை இருக்காது என்ற நம்பிக்கையில், பயனர்கள் தொடர்ந்து கூகுள் உதவியை நாடுகின்றனர்.
இதை பயன்படுத்தியே மோசடியாளர்கள், பயனர்களிடம் பணம் பறிக்க துவங்கி இருக்கின்றனர். சில சமயங்களில் நம்பகத்தன்மையை அதிகப்படுத்தும் முயற்சியாக மோசடியாளர்கள் ஐ.வி.ஆர்.எஸ். எனப்படும் பதிவு செய்யப்பட்ட டெலிபோன் குரல்களை மாற்றி பேசுகின்றனர். இவற்றை நம்பி பயனர்கள் தங்களது கிரெடிட் கார்டு மற்றும் இதர வங்கி விவரங்களை வழங்கி, பின் ஏமாந்து போகின்றனர்.
கூகுள் தரப்பில் இந்த விவகாரத்தை ஒப்புக் கொண்டுள்ள நிலையில், மொபைல் நம்பர்களை எடிட் செய்யும் வசதி தொடர்ந்து வழங்கப்படுகிறது. ஆன்லைனில் இதுபோன்ற விவகாரங்களில் சிக்காமல் இருக்க பயனர்கள் கூகுளில் இருந்து கிடைக்கும் தகவல்களை உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது.
மேலும் பயனர்கள் எக்காரணம் கொண்டும் தங்களது கிரெடிட் கார்டு, ஏ.டி.எம். கடவுச்சொல் மற்றும் இதர விவரங்களை எவர் கேட்பினும் வழங்காமல் இருக்க வேண்டும்.