இனவாதத்தை கக்குகின்றார் உதய கம்பன் பில சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றச்சாட்டு

357 0

suresh-premachandranவடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வனை கைது செய்ய வேண்டும் என்று முட்டாள் தனமான அர்த்தமற்ற கருத்தை பிவிதுறு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்பன் பில வெளியிட்டுள்ளார் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரரேமச் சந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
எழுக தமிழ் பேரணிக்காக வடமாகாண சபையின் ஒரு சத நிதியோ அல்லது வளங்களோ பயன்படுத்தப்படவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது. இச் சந்திப்பில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்களினால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்:-
கடந்த 24 ஆம் திகதி தமிழ் மக்களின் பிரச்சினைகளை அரசாங்கத்திற்கும், சர்வதேசத்திற்கும் வெளிப்படுத்தும் வகையில் தமிழ் மக்கள் பேரவையினால் எழுக தமிழ் எழுச்சிப் பேரணி நடாத்தப்பட்டிருந்தது.
இப் பேரணிக்காக வடக்கு மாகாண சபையின் நிதிகளும், வளங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அர்த்தமற்ற குற்றச்சாட்டினை பிவிதுறு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்பன் பில வெளியிட்டுள்ளார்.
அத்துடன் இக் குற்றச்சாட்டிற்காக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை கைது செய்ய வேண்டும் என்றும் அவர் முட்டாள் தனமான கருத்தினை அவர் தெரிவித்துள்ளார்.
எழுக தமிழ் பேரணிக்காக பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டது உண்மை. ஆனால் அப் பிரச்சார நடவடிக்கைகள் உட்பட, வேறு எந்த தேவைகளுக்கும் வடமாகாண சபையின் ஒரு சத நிதிகூட பயன்படுத்தப்படவில்லை. அதே போன்று வடமாகாண சபையின் வளங்களும், குறிப்பாக வகனங்களும் பயன்படுத்தப்படவில்லை.
மேலும் இவ் எழுச்சிப் பேரணிக்காக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்கள் வருகைதந்திருந்தனர் என்பதும் உண்மை.
தமிழ் மக்கள் தமது உரிமைகளை கேட்பதை வைத்துக் கொண்டு அதனை இனவாதமாக தெற்கில் இனவாதமாக சித்தரிக்கும் கேவலமான சிந்தனையை கொண்டவராக உதய கம்பன் பிர இருக்கின்றார்.
எழுக தமிழ் பேரணியானது சிங்கள மக்களுடைய உரிமைகளுக்கு எதிராக நடத்தப்பட்ட பேரணி இல்லை. ஒட்டுமொத்த தமிழ் மக்களுடைய உரிமைகளை கோருகின்ற பேரணியாகவே அமைகின்றது என்றார்.