அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் செயலிழந்துபோன சுயாதீன ஆணைக்குழுக்கள்

320 0

பொதுச்சேவை, நீதித்துறை, நிதித்துறை, பொலிஸ், தேர்தல்கள் மற்றும் மனித உரிமைகள் உட்பட பலதுறைகளை மேற்பார்வை செய்வதற்காக நியமிக்கப்பட்டிருந்த இலங்கையின் சுயாதீன ஆணைக்குழுக்கள் அவற்றின் தலைவர்களினதும் உறுப்பினர்களினதும் 3 வருட பதவிக்காலம் காலாவதியானதைத் தொடர்ந்து நவம்பர் 19 திகதியுடன் செயலிழந்துபோய்விட்டன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்த ஆணைக்குழுக்களின் தலைவர்களையும் உறுப்பினர்களையும் மீண்டும் நியமனம் செய்யவேண்டும் அல்லது அரசியலமைப்புக்கான 19 வது திருத்தத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அரசியலமைப்பு பேரவையின் அங்கீகாரத்தைத் தொடர்ந்து புதிய உறுப்பினர்களை நியமிக்கவேண்டும்.

தேர்தல்கள் ஆணைக்குழு, பொதுச்சேவை ஆணைக்குழு, தேசிய பொலிஸ் ஆணைக்குழு, கணக்காய்வு சேவைகள் ஆணைக்குழு, மனித உரிமைகள் ஆணைக்குழு, இலஞ்ச ஊழல் முறைப்பாடுகளை விராரணை செய்வதற்கான ஆணைக்குழு, எல்லை நிர்ணய ஆணைக்குழு, பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு, அரசகரும மொழிகள் ஆணைக்குழு என்று 11 ஆணைக்குழுக்கள் 2015 நவம்பர் 19 ஆம் திகதி நியமிக்கப்பட்டன.

நவம்பர் 19 தொடங்கிய அடுத்த மூன்று வருடங்களுக்கு அரச நிறுவனங்களை மேற்பார்வை செய்வதற்கு இந்த ஆணைக்குழுக்களுக்கு புதிய உறுப்பினர்களை ஜனாதிபதி நியமிக்கவேண்டும் அல்லது தற்போதைய  தலைவர்களினதும்  உறுப்பினர்களினதும் பதவிக்காலங்களை நீடிக்கவேண்டும் என்று பாராளுமன்ற சபாநாயகர் அலுவலகத்திலன் உயர் மட்ட அதிகாரியொருவர் பத்திரிகைக்கு  தெரிவித்திருக்கிறார்.

இந்த ஆணைக்குழுக்களின் செயற்பாடுகள் தற்போது அன்றாட நிருவாக அலுவல்களுடன் மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கின்ற அதேவேளை, புதிய உறுப்பினர்களை நியமிப்பதன் மூலமாக அல்லது தற்போதைய உறுப்பினர்களின் பதவிக்காலத்தை நீடிப்பதன் மூலமாக அவற்றை மீளமைக்கவேண்டிய அவசரத்தேவை இருக்கிறது என்று  அந்த அதிகாரி கூறியிருக்கிறார்.

ஆணைக்குழுக்களுக்கு புதிய உறுப்பினர்களை நியமிப்பதற்கான வழமையான நடைமுறை கடந்த ஒருமாதத்துக்கும் கூடுதலான காலமாக நீடித்த அரசியல் நெருக்கடியினால் தடைப்பட்டிருந்தன. அந்த நெருக்கடி காரணமாக ஆணைக்குழுவின் உறுப்பினர்களினால் தீர்மானங்களை எடுப்பது சாத்தியமானதாக இருக்கவில்லை என்று கூறப்படுகிறது.

ஆணைக்குழுக்களை மீளச்செயற்படுத்தவோ அல்லது தற்போதைய உறுப்பினர்களின் பதவிக்காலத்தை நீடிக்கவோ ஜனாதிபதி எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.அதன் விளைவாக பொது நிருவாகத்தில் இன்னொரு நெருக்கடி தோன்றும் நிலை ஏற்பட்டிருக்கிறது என்று இலங்கை நிருவாகசேவையின்சிரேஷ்ட அதிகாரியொருவர் கூறினார்.

அரசியல் நெருக்கடி ஒரு முடிவுக்கு வந்திருப்பதாக நம்பப்படுகின்ற நிலையில், சுயாதீன ஆணைக்குழுக்களை மீளச்செயற்படுத்த அரசாங்கம் உடனடி நடவடிக்கையில் இறங்கவேண்டியது அவசியமாகும்.அல்லாவிட்டால், ஆணைக்குழுக்கழுக்கு சுயாதீன தலைமைத்துவம் இல்லாமல் அவை அரசாங்கத்தின் நேரடிக்கட்டுப்பாட்டின் கீழ் வரும் விரும்பத்தகாத நிலை தோன்றும் என்றும் அவர் கூறினார்.

தற்போதைய சூழ்நிலைகளின் கீழ் ஆணைக்குழுக்களின் தலைவர்களும் உறுப்பினர்களும் அரச நிறுவனங்களை மேற்பார்வை செய்வதில் தங்களது கடமைகளையும் பொறுப்புக்களையும் நிறைவேற்றமுடியாதவர்களாக இருக்கிறார்கள் என்றும் அந்த அதிகாரி சுட்டிக்காட்டினார்.

ஆணைக்குழுக்கள் அரசியலமைப்புக்கான 19 வது திருத்தத்தின் இடைக்கால ஏற்பாடுகளின் கீழேயே தற்போது அவற்றின் பணிகளைத் தொடருகின்றன.திறைசேரியினால் விதிக்கப்பட்டிருக்கும் நிதிக்கட்டுப்பாடுகளின் காரணமாக வழமையான செயற்பாடுகளை முன்னெடுப்பதில் ஆணைக்குழுக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றன. இந்த இடத்தில்தான் ஆணைக்குழுக்களின் சுயாதீனம் சோதனைக்குள்ளாகிறது என்று சுட்டிக்காட்டும் அரசியல் அவதானிகள் ஜனாதிபதி உடனடியாக ஆணைக்குழுக்களை மீளச்செயற்படுத்த நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள்.

Leave a comment