தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்த ஒருவருக்கு அமைச்சு வழங்குகையில் பூனைக்குட்டிகளாகத் தெரிபவர்கள், எம்மோடு இணைகையில் மாத்திரம் புலிகளாகத் தெரிகின்றனர் என பாராளுமுன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹமான் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியால் இன்று திங்கட்கிழமை காலிமுகத்திடலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஜனநாயக வெற்றிக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு தற்போது விடுதலைப்புலிகள் என்று முத்திரை குத்த முயற்சிக்கின்றார்கள். இந்த நாட்டில் அனைத்து இனத்தவரையும் ஒன்றிணைத்து, ஒருமித்த நாடு என்ற வகையில் முன்செல்வதற்கு ஒத்துழைப்பு வழங்கத்தக்க தலைமைத்துவம் வடக்கில் உருவாகியுள்ளது. அவர்களுடன் இணைந்து செயற்படுகையில் புலிகள் என்கின்றார்கள்.
இந்த நாட்டின் ஜனாதிபதியாக நாங்களே அவரை அமர வைத்தோம். எனவே அவரது செயற்பாடுகள் தொடர்பில் கேள்வி கேட்கும் அதிகாரம் எமக்குள்ளது.
நாட்டிற்கும், மக்களுக்கும் சேவை செய்ய வேண்டும் என்பதற்காகவே அவரை ஜனாதிபதியாக்கியிருந்தோமே தவிர மஹிந்த ராஜபக்ஷவுடன் கள்ள ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கோ, அவரை சட்டத்திற்கு விரோதமாக பிரதமராக நியமிப்பதற்கோ அல்ல என்பதை மைத்திரிபால சிறிசேன நன்கு புரிந்துகொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.