இனவாதமற்ற ஒன்றிணைந்த அரசாங்கத்தை அமைக்கவே த.தே.கூ. ஆதரவளித்தது – பொன்சேகா

306 0

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எமக்கு ஆதரவு வழங்கியதற்காக அவர்களை பிரிவினைவாதிகள் என விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர். இனவாதமின்றிய ஒன்றிணைந்த அரசாங்கத்தை அமைப்பதற்கே தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு ஆதரவளித்துள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியினால் இன்று திங்கட்கிழமை காலி முகத்திடலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஜனநாயகத்திற்கான வெற்றி கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில்,

சதித்திட்டத்தின் மூலம் மஹிந்த ராஜபக்ஷவும் அவரது சகாக்களும் ஆட்சியை கைப்பற்றி நன்மையடைய முயற்சித்தனர்.

ஆனால் அது தோல்வியில் முடிவடைந்தது. தனது ஆட்சிக்காலம் முழுவதும் மஹிந்த ராஜபக்ஷ சர்வாதிகாரியாகவே செயற்பட்டார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு எமக்கு ஆதரவு வழங்கியதற்காக அவர்களை பிரிவினைவாதிகள் என விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர்.

இனவாதமின்றிய ஒன்றிணைந்த அரசாங்கத்தை அமைப்பதற்கே தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு ஆதரவளித்துள்ளது.

தற்போது மத்திய வங்கி பிணை முறி குறித்து பேசும் அவர்கள் எவன்கார்ட், மத்தள விமான நிலையம், அம்பாந்தோட்டை துறைமுகம் என பல்வேறு வழிகளிலும் பல கோடி ரூபாய் கொள்ளையடித்துள்ளனர்.

உலகில் பணக்காரர்கள் பட்டியலிலும் மஹிந்த ராஜபக்ஷ இடம்பிடித்துள்ளார். இவற்றை யாராலும் மறந்து விட முடியாது. நாம் பிழை செய்வதாகக் கூறி எம்மை ஆட்சியிலிருந்து அனுப்பினால் மீண்டும் மஹிந்த ராபக்ஷவை ஆட்சியில் அமர்த்த முடியுமா என நீங்கள் சிந்திக்க வேண்டும். நீதித்துறை , பொலிஸ் என அனைத்தையும் தனது அதிகார பலத்தின் கீழ் கட்டுப்படுத்தி வைத்திருந்த மஹிந்த ராபக்ஷவை மீண்டும் ஆட்சியில் அமர்த்த முடியுமா?  என கேள்வியெழுப்பினார்.

Leave a comment