பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தை 2020ஆம் ஆண்டுக்குள் செயல்படுத்த போலாந்தில் கூடிய பேச்சுவார்த்தையாளர்கள், பல கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான இறுதி உடன்படிக்கையை எட்டியுள்ளனர்.
முன்னர் கரியமில வெளியேற்றத்தைச் சார்ந்துள்ள பொருளாதார நடவடிக்கைகள் பாதிக்கப்படும் எனவும் கார்பன் சந்தையின் எதிர்காலம் குறித்த அச்சுறுத்தல்கள் ஏற்படும் எனவும் தெரிவித்தமையினால் கூட்டம் மேற்கொண்டு தொடருமா எனக் காணப்பட்ட நிலையில் இறுதி உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட புதிய விதிகள், உலக நாடுகள் உறுதியேற்றுள்ள கார்பன் வெளியேற்ற கட்டுப்பாட்டை நிச்சயப்படுத்தும் என கூட்டத்தில் கலந்து கொண்ட பிரநிதிகள் எதிர்பார்க்கின்றனர். அதிகரித்து வரும் புவியின் வெப்பநிலையை 2 டிகிரி செல்சியஸ் எனும் அளவில் குறைக்க வேண்டும் என்பதே பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தின் முக்கிய இலக்காகும்.
மேலும் ஏழை நாடுகளுக்கு ஏற்றாற்போல வளர்ந்த நாடுகள் உதவ வேண்டும் என்பதுதான் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தின் பொதுவான விதிமுறையாகும் பருவநிலை மாற்றத்திற்கு காரணம் தாங்கள்தான் என்பதனை சட்டபூர்வமாக பொறுப்பேற்க வேண்டும் என்ற கருத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கும் பணக்கார உலக நாடுகள் எதிர்காலத்தில் அதிக செலவு செய்ய வேண்டிய சூழல் ஏற்படலாம் என்ற அச்சத்தில் உள்ளன.
2020ஆம் ஆண்டுக்கு முன்பாகவே இந்த கார்பன் வெளியேற்ற அளவை கட்டுப்படுத்த வேண்டும் என்ற இலக்கை உலக நாடுகள் விரைவாக எட்டவேண்டும் என்ற நிலையை காண கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள பேச்சுவார்த்தையாளர்கள் எதிர்பார்க்கின்றனர். எனினும், பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தின்படி, உலக நாடுகள் எடுத்துள்ள முயற்சிகள் முற்றிலும் போதாது என கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள ஒருநாட்டின் பிரதிநிதி கவலை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.