‘எழுக தமிழ்’ பேரணி, எதிர்பார்த்ததைப் போலவே பல எதிர் உணர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியானது. இரண்டு முரண்பட்ட கருத்துக்களைக் கொண்டிருக்கின்றன என்பதை இந்தப் பேரணி வெளிப்படச் செய்திருக்கின்றது. அதேபோன்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் மக்கள் அணி திரள்கின்ற விடயத்தில் இரண்டு முரண்பட்ட கருத்துக்களைக் கொண்டிருப்பதை இந்தப் பேரணி வெளிக் கொணர்ந்திருக்கின்றது.
‘எழுக தமிழ்’ பேரணியானது, தமிழ் மக்கள் பேரவையின் பயணத்தில் கிடைத்துள்ள மூன்றாவது வெற்றிகரமான நிகழ்வாகக் கருதப்படுகின்றது.
பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் தோற்றம் பெற்ற தமிழ் மக்கள் பேரவை, முதல் நடவடிக்கையாக தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை உள்ளடக்கியதாக, அரசியல் தீர்வுக்கான முன் யோசனைகளை, ஒரு வரைபாக முன்வைத்தது. அதனை இன்னுமே தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமையும், தமிழரசுக் கட்சியின் தலைமையும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பினால், அதன் அங்கத்துவக் கட்சிகளின் உடன்பாட்டுடன் முன்வைக்கப்பட்ட கடந்த பொதுத் தேர்தலுக்கான கொள்கைப் பிரகடனத்தை உள்ளடக்கிய வகையிலேயே தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வுக்கான வரைபு தயாரிக்கப்பட்டிருந்தது.
அரசியல் தீர்வு விடயத்தில், 2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது முன்வைக்கப்பட்ட தேர்தல் கொள்கைப் பிரகடனத்தையே தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் தமிழரசுக் கட்சியும், அரசியல் தீர்வுக்கான தமது நிலைப்பாடு என்று அவற்றின் தலைமை வலியுறுத்தி வருகின்றது. அப்படி இருந்தும்கூட, அந்தத் தேர்தல் பிரகடனத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழ் மக்கள் பேரவை உருவாக்கிய அரசியல் தீர்வுக்கான வரைபை அந்தத் தலைமை ஏற்றுக்கொள்ளவில்லை. அரசியல் தீர்வுக்கான வரைபையடுத்து, மட்டக்களப்பில் கலாசார விழா ஒன்றை ஒழுங்கு செய்து அதனையும் வெற்றிகரமாக தமிழ் மக்கள் பேரவை நடத்தி முடித்திருந்தது. இது அந்தப் பேரவைக்குக் கிடைத்த இரண்டாவது வெற்றியாகக் குறிப்பிடப்படுகின்றது.
கலை கலாசாரங்களைப் பாதுகாப்பதுடன். இதன் ஊடாக வடக்கையும் கிழக்கையும் மேலும் இறுக்கமாக ஒன்றிணைப்பதே இந்தக் கலாசார விழாவின் நோக்கம் என தமிழ் மக்கள் பேரவை கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கலாசார விழாவுக்கு அடுத்ததாக, தமிழ் மக்கள் பேரவையின் ‘எழுக தமிழ்’ பேரணி வெற்றிகரமாக நடந்தேறியிருக்கின்றது.
இந்தப் பேரணிக்கு ஆதரவளிக்க வேண்டும் என தமிழ் மக்கள் பேரவையினர் விடுத்த வேண்டுகோளை தமிழரசுக் கட்சி நிராகரித்துவிட்டது. அரசாங்கத்துடன் இணக்கமாகச் செயற்பட்டு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கின்ற நிலையில், அரசாங்கத்திற்கு சங்கடத்தையும், அரசியல் ரீதியாக நெருக்கடிகளையும் ஏற்படுத்தக் கூடிய நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது. இந்தச் சந்தர்ப்பத்தில் பேரணி நடத்தப்படக் கூடாது என தெரிவித்து, பேரணியில் நாங்கள் கலந்து கொள்ளமாட்டோம் என தமிழரசுக் கட்சியின் தலைமை கூறிவிட்டது.
இதற்கு முன்னதாக தமிழ் மக்கள் பேரவை பேரணியொன்றை நடத்தப் போவதாக விடுத்திருந்த அறிவித்தல் பற்றிய தகவலை அறிந்ததும், அதற்கு எதிராக அறிக்கையொன்றை விடுத்து, அந்தப் பேரணியில் மக்கள் கலந்து கொள்ளக் கூடாது என்று கோரிக்கை விடுவதற்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமை முனைந்திருந்ததாகவும், பின்னர் அவ்வாறு அறிக்கை வெளியிடும் ஆலோசனை கைவிடப்பட்டதாகவும் தகவல்கள் கசிந்திருந்தன.
இத்தகைய ஒரு பின்னணியில்தான், ‘எழுக தமிழ்’ பேரணியில் யுத்தத்திற்குப் பின்னர் முதற் தடவையாக பெரும் எண்ணிக்கையில் மக்கள் அணிதிரண்டு யாழ் நகர வீதிகளில் நடந்து சென்று தமது கோரிக்கைகளை விண் அதிர ஒலித்திருக்கின்றார்கள்.
இந்தப் பேரணியில் இணைந்து வந்து, யாழ் முற்றவெளி மைதானத்தில் திரண்ட மக்கள் கூட்டம், வடமாகாண சபையின் முதலமைச்சராக மட்டுமே நோக்கப்பட்டு வந்த விக்னேஸ்வரனை, ஓர் அரசியல் தலைவராக நோக்கி கோஷங்கள் எழுப்பிய நிகழ்வும் இடம்பெற்றிருந்தது.
எழுக தமிழ் பேரணி ஏற்படுத்தியுள்ள சங்கடங்கள்
தமிழ் மக்கள் பேரவையின் தோற்றத்தையே சகித்துக் கொள்ள முடியாமலிருந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைமைக்கும், தமிழரசுக் கட்சியின் தலைமைக்கும் இந்தப் பேரணியின் மூலம் பேரவை அடைந்துள்ள வெற்றியானது அரசியல் ரீதியாகப் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியிருப்பதைத் தெளிவாகக் காணமுடிகின்றது.
இந்த சங்கடம் இரண்டு வகைப்பட்டது. தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றுள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பினுடைய தலைமை தனது வழிநடத்தலில் ‘எழுக தமிழ்’ பேரணியைப் போன்று மக்களை இதுவரையில் எழுச்சியுறச் செய்ததில்லை. இதே போன்று மக்களை எழுச்சி கொண்டவர்களாக அணி திரட்டுவதற்கு இனிமேலாவது முடியுமா என்பதும் கேள்வியாகவே தொக்கி நிற்கின்றது.
அது மட்டுமல்ல. தமிழ் மக்கள் பேரவையின் ‘எழுக தமிழ்’ செயற்பாடானது, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் மீதும், தமிழரசுக் கட்சி மீதும் மக்கள் கொண்டிருந்த அரசியல் ரீதியான ஆதரவையும் அபிமானத்தையும் கரையச் செய்துவிடுமோ என்ற நியாயமான அரசியல் அச்சம் சார்ந்த சங்கடமான நிலைமையைத் தோற்றுவித்திருப்பதையும் உணர முடிகின்றது. தமிழ்த்தேசிய கூட்டமைப்புத் தலைமையின் விருப்பத்திற்கு மாறாகவே யாழ்ப்பாணத்தில், வடபகுதி மக்கள் வேறு ஒரு தலைமையின் கீழ் பெரும் எண்ணிக்கையில் அணி திரண்டு தமது உரிமைகளுக்காகவும், தாங்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்காகவும் குரல் கொடுத்திருக்கின்றார்கள்.
இது, தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவில் பலமுள்ளதோர் அரசியல் சக்தியாகத் தன்னைக் காட்டி வருகின்ற கூட்டமைப்பின் தலைமைக்கு அரசாங்கத்தின் முன்னால் ஓர் அரசியல் ரீதியான சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் மக்கள் பேரவையின் இந்தப் பேரணியானது, எழுக தமிழ் என்ற மகுடத்தின் கீழ் நடத்தப்பட்டிருப்பதனால், அது இனவாத நோக்கத்தைக் கொண்டு நடத்தப்பட்டதாகவும், பேரவை, இனவாதத்தை உள்நோக்கமாகக் கொண்டிருப்பதாகவும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. இந்தக் கருத்துக்கள் ஒரு குற்றச்சாட்டாகவே வைக்கப்பட்டிருப்பதையும் காண முடிகின்றது. பேரணியை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ள போதிலும், அது குறித்து எழுந்துள்ள எதிர்க்கருத்துக்கள் அல்லது எதிர்வினைகள் தமிழ் மக்கள் பேரவையையும் சிறிது சங்கடத்திற்கு உள்ளாக்கியிருப்பதாகவே தெரிகின்றது.
‘எழுக தமிழ்’ பேரணியின் மூலம் வடக்கில் ஏற்பட்டுள்ள மக்கள் எழுச்சியானது, தெற்கில் உள்ள இனவாத மேலாண்மையாளர்களுக்கு அரசியல் ரீதியாக அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதை, பேரணி தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அரசியல் கருத்துக்களின் மூலம் அறிய முடிகின்றது.
அரசியல் இல்லாத அரசியல்…….?
தமிழ் மக்கள் பேரவையானது சமூக அமைப்புக்களையும், பொது அமைப்புக்களையும், தொழிற்சங்கங்கள், பல்கலைக்கழக சமூகத்தையும், தமிழரசுக் கட்சியின் உப தலைவர் பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் மற்றும் ஈபிஆர்எல்எவ், புளொட் ஆகிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுடன் தமிழ் மக்கள் தேசிய முன்னணி ஆகிய அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கியதோர் அமைப்பாகும். அதன் மூன்று இணைத்தலைவர்களில் ஒருவராகவும் முக்கியமானவராகவும் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் திகழ்கின்றார்.
ஆயினும் தமிழ் மக்கள் பேரவையானது, தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு எதிரான ஓர் அரசியல் அமைப்பாக ஓர் அரசியல் கட்சியாகவும், தமிழரசுக் கட்சியை வீழ்த்துவதற்கான நோக்கத்துடன் உருவாக்கப்படுகின்றதோர் அரசியல் அமைப்பாகவும் ஆரம்பத்தில் நோக்கப்பட்டது.
இதனையடுத்து பலத்த கண்டனங்களும் மோசமான விமர்சனங்களும் பேரவைக்கு எதிராகவும், அதன் இணைத்தலைவராகிய வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிராகவும் முன் வைக்கப்பட்டிருந்தன.
ஆயினும் தமிழ் மக்கள் பேரவையானது ஓர் அரசியல் கட்சியாக மாற்றம் பெறமாட்டாது என்ற உத்தரவாதத்தை, உறுதியான முறையில் வழங்கி, எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் அது தனது பணிகளை முன்னெடுத்திருந்தது. இந்த நிலையிலேயே, பேரவையின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட ‘எழுக தமிழ்’ பேரணியில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு தமது உரிமைகளைக் கோரியிருக்கின்றார்கள்.
தமிழ் மக்கள் பேரவை என்பது ஓர் அரசியல் கட்சியல்ல. அது அரசியல் கட்சிகளை உள்ளடக்கியிருந்தாலும்கூட, மக்களின் உரிமைக்காக, மக்களை ஓரணியில் வைத்து, போராட்டங்களை ஓர் ஒழுங்கமைப்பில் முன்னெடுப்பதற்காகவே, அது உருவாக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஓர் அரசியல் கட்சியாக அல்லாமல் – ஆனால் சில அரசியல் கட்சிகளை உள்ளடக்கிக் கொண்டு, அரசியல் செயற்பாட்டை தமிழ் மக்கள் பேரவை முன்னெடுத்திருக்கின்றது. இதனை, கட்சி அரசியல் ரீதியில் நோக்குவதன் காரணமாகவே பல்வேறு சங்கடங்களும் அரசியல் ரீதியான அச்சங்களும் தோன்றியிருக்கின்றன என கருத இடமுண்டு. ஆயினும் இந்த, அரசியல் அடையாளமில்லாத அரசியற் செயற்பாடு, பலரையும் சங்கடத்திற்கும் கலக்கத்திற்கும் உள்ளாகியிருக்கியிருக்கின்றது.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பினால், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக முன்வைக்கப்பட்ட தேர்தல் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்ட முக்கியமான விடயங்களை அடிப்படையாகக் கொண்ட கோரிக்கைகளே முன் வைக்கப்பட்டிருந்தன.
புதிய விடயங்கள் எதுவுமில்லை
இந்தப் பேரணியின் நோக்கத்திலும், பேரணியின் இறுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் முதலமைச்சர் ஆற்றிய முக்கிய உரையிலும் புதிய விடயங்கள் எதுவுமே கூறப்படவில்லை. எல்லோருக்கும் தெரிந்த விடயங்களையே – அவை சம்பந்தப்பட்ட கோரிக்கைகளே அவற்றில் தெரிவிக்கப்பட்டிருந்தன.இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், பொன்னம்பலம் கஜேந்திரகுமார் போன்றவர்களும் புதிய விடயங்கள் எதையும் பேசவில்லை. அரசியல் ரீதியாகக் கூட தீவிரமான கருத்துக்களை அவர்கள் வெளியிடவில்லை.
வடக்கு கிழக்கு இணைந்த தாயகப் பிரதேசத்தில் அதிகாரப் பகிர்வுடன் கூடிய சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் அரசியல் தீர்வு வேண்டும். மக்கள் எதிர்நோக்கியுள்ள இராணுவத்தின் பிரசன்னம், இராணுவத்தின் பிடியில் உள்ள காணிகள் விடுவிப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான பொறுப்புக் கூறல் உள்ளிட்ட விடயங்களே இந்தப் பேரணியில் முக்கியத்துவம் பெற்றிருந்தன.
தமிழ் மக்களுக்குரிய உரிமைகளைத் தரவேண்டும். அவர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும். அதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ் மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமான முறையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எந்த வகையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பையோ அல்லது தமிழரசுக் கட்சியையோ அரசியல் ரீதியாகப் பாதிக்கும் என்பது தெரியவில்லை.
மக்கள் வீதியில் இறங்கி தமது தேவைகளை, பிரச்சினைகளை வெளிப்படுத்தி, அரசியல் உரிமைகளைத் தாருங்கள் எனக் கோருவது அரசாங்கம் முன்னெடுத்துள்ள நல்லிணக்க முயற்சிகளுக்குப் பாதகமாக அமையும் என்று எவ்வாறு கூற முடியும்?
அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளில் வேகம் போதாது. பல முக்கிய பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை என்பதையே மக்கள் பேரணியில் சுட்டிக்காட்டியிருக்கின்றார்கள் அரசாங்கம்செய்தவற்றை, நிறைவேற்றியுள்ள விடயங்களைச் செய்யவில்லை. தீர்க்கப்பட்ட பிரச்சினைகளைத் தீர்க்கவில்லை என மக்கள் வீதிகளில் இறங்கி அடாவடித்தனமாக பேரணி நடத்தியிருந்தால், அது அரசாங்கத்தின் நல்லிணக்க முயற்சிகளுக்கும், பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளுக்கும் குந்தகம் எற்படுத்தக் கூடும் என கூறலாம். குற்றம் சுமத்தலாம். ஆனால் அந்த வகையில் இந்தப் பேரணியில் நடைபெறவில்லையே.
கூர்மை பெற்றுள்ள அரசியல் ஆதங்கம்
அது மட்டுமல்ல. அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு, பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்திருப்பதாகக் கூறுகின்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமையின் செயல்வேகம் போதாது என்ற உணர்வு பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் கூர்மை அடைந்திருக்கின்றது.தங்களுடைய ஏமாற்றம், கவலை, கரிசனை என்பவற்றை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமைக்கோ, தலைவர்களுக்கோ உரிய தளத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் மனச்சுமைகள் குறையத்தக்க வகையில் எடுத்துக் கூறுவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. வழங்கப்படவில்லை என்பது யதார்த்தம். பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுத் தரும் என்று ஐநா மன்றத்தின் மீது மக்கள் அதிக நம்பிக்கை கொண்டிருந்தார்கள். ஆனால், ஐநா செயலாளர் நாயகம் வடபகுதிக்கு வந்தபோது, அவருடைய முன்னிலையில் தமது உள்ளக் குமுறல்களை முன்வைக்க முடியாமல் போனது, அந்த மக்கள் மனங்களில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.
இத்தகைய வாய்ப்பு கிடைக்கும் அது நடைபெற வேண்டும் என்று மக்கள் எதிர்பார்ப்பது நியாயமான எதிர்பார்ப்பாகமாட்டாது என்பதை மறுப்பதற்கில்லை.ஆயினும் ஐநாவும் சர்வதேசமும் தமிழ் மக்களுடைய பிரச்சினையில் அதிக அக்கறை கொண்டிருக்கின்றன. அவற்றின் ஆதரவு எமக்கு உண்டு. அதன் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்ற அதீத நம்பிக்கை தமிழ் அரசியல் தலைவர்களினால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஊட்டப்பட்டிருக்கின்றது. ஐநா பிரதிநிதிகளோ சர்வதேச இராஜதந்திரிகளோ தமது பிரதேசத்திற்கு விஜயம் செய்யும்போது, அவர்களிடம் தமது மனத் தாக்கங்களையும் ஆதங்கங்களையும் வெளிப்படுதுவதற்கு இந்த நம்பிக்கை அவர்களைத் தூண்டியிருந்தது என்றே கூற வேண்டும். ஆனால் அதற்கான சந்தர்ப்பங்கள் அவர்களுக்கு முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் விஜயம் தவிர்ந்த ஏனைய விஜயங்களின்போது கிடைக்கவில்லை என்றே கூற வேண்டும்.
வெளித்தரப்பினர் மடடுமல்ல. தங்களால் தெரிவு செய்யப்பட்டுள்ள தமது அரசியல் தலைவர்களிடம்கூட அவர்கள் தமது உள்ளக் கவலைகளை கரிசனைகளை வெளியிடுவதற்கான சந்தர்ப்பம் கிடைக்காமல் மனதில் புழுங்கிக்கொண்டிருக்கின்றார்கள். இந்த நிலையிலேயே, அவர்கள் இந்தப் பேரணியில் கலந்து கொண்டு தமது உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கின்றார்கள்.போராட்டங்கள் மற்றும் பேரணிகளில் காணாமல் போனோரின் குடும்ப உறவினர்கள், சிறைக்கைதிகளின் குடும்ப உறவினர்களே கூடுதலாகக் கலந்து கொள்வார்கள் என்பது வழமையாகும். ஆனால், இந்தப் பேரணியில் இவர்கள் மட்டுமல்லாமல், இளைஞர் யுவதிகள், குடும்பஸ்தர்கள் முதியவர்கள் என பலதரப்பட்டோர், ஆண்களும் பெண்களுமாகக் கலந்து கொண்டிருந்ததைக் காண முடிந்தது. மொத்தத்தில் இந்தப் பேரணியானது ஓர் இயல்பான மக்கள் எழுச்சியாக இடம்பெற்றிருந்தது என்றால் அது மிகையாகாது.
தென்னிலங்கையின் உணர்வுகள்
தமிழ் மக்கள் பேரவையின் ‘எழுக தமிழ்’ பேரணியானது, தென்னிலங்கையின் தீவிர இனவாத அரசியல் போக்கைக் கொண்டிருப்பவர்களுக்கு வயிற்றில் புளியைக் கரைத்துவிட்டிருக்கின்றது. மிதவாத போக்கில் அரசாங்கத்துடன் மென்மையான அரசியல் உறவைக் கொண்டுள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பையும், இலங்கைத் தமிழரசுக் கட்சியையும் மீறி வடமாகாணத்தில் மக்கள் வேறு ஒரு தலைமையின் கீழ் குறிப்பாக முதலமைச்சர் விக்னேஸ்வரனின் தலைமையில் எழுச்சி பெற்றிருப்பது அரசியல் ரீதியாக அவர்களுக்கு புதிய அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதையே அவர்களுடைய எதிர்வினை கூற்றுக்களில் இருந்து உணர முடிகின்றது.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமாகிய சம்பந்தனையும் மீறிய வகையில் வடமாகாண முதலமைச்சர் அரசியலில் புத்தூக்கம் பெறுவதற்கான அரசியல் அடையாளமாகவே இந்தப் பேரணியும், அங்கு அவர் ஆற்றிய உரையும் தென்னிலங்கையின் தீவிர இனவாத சக்திகளினால் நோக்கப்படுகின்றது. அதன் காரணமாகவே வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் இனவாதம் பேசியிருக்கின்றார். இனவாதத்தைத் தூண்டியிருக்கின்றார் என்ற குற்றச்சாட்டுக்களை அவர்கள் முன் வைத்திருக்கின்றார்கள்.
அது மட்டுமல்ல. இந்த மக்கள் எழுச்சியும், அவருடைய தலைமையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ள நல்லிணக்க முயற்சிகளுக்குப் பாதகமானது என்றும் அவர்கள் குற்றம் சுமத்தியிருக்கின்றார்கள். மக்கள் தங்களுடைய உரிமைகளுக்காகவே குரல் கொடுத்திருக்கின்றார்கள். உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என கேட்பது அரசாங்கத்தின் நல்லிணக்க முயற்சிகளுக்கு வேகமூட்டுவதற்கே அல்லாமல், அதற்கு இடையூறு செய்வதற்கல்ல.
இனவாதத்திலேயே ஊறிவந்துள்ள தென்னிலங்கை அரசியல் சக்திகள் நியாயமான கோரிக்கைகளுக்கான எழுச்சியை நோக்கி இனவாதத்திற்கான எழுச்சி என சாடுவது நகைப்புக்குரியதாக இருக்கின்றது.
மொத்தத்தில் ‘எழுக தமிழ்’ பேரணியானது, வடபகுதி மக்களுடைய மனக்கவலைகள், தேவைகள், உரிமைக்கான கோரிக்கைகள் என்பவற்றையே பிரதிபலித்திருக்கின்றது என்ற உண்மையை உணர்ந்து, அதற்கேற்ற வகையில் செயற்பட வேண்டியது தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, தமிழரசுக் கட்சி மற்றும் தென்னிலங்கை அரசியல் தலைமைகளின் பொறுப்பாகும். இந்தப் பொறுப்பு அரசாங்கத்திற்கும் உள்ளது.
வடபகுதி மக்கள் தமது அரசியல் தலைமைகளில் காணப்படுகின்ற விரிசல்களையே வெளிப்படுத்தியிருக்கின்றார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்காகச் செயற்படுகின்ற பொது அமைப்புக்களாயினும்சரி, பொது சக்திகளாயினும்சரி, அரசியல் சக்திகளாயினும்சரி அனைத்து சக்திகளும் ஓர் அணியில் இணைந்து செயற்பட வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து தங்களுக்காகக் குரல் கொடுக்க வேண்டும் என்ற விருப்பத்தையும் செய்தியையுமே வடபகுதி மக்கள் எழுக தமிழ் பேரணியின் மூலம் தமிழ்த் தலைவர்களுக்கும், அரசாங்கத்திற்கும், சர்வதேசத்திற்கும் கொடுத்திருக்கின்றார்கள்.
இதனைச் சரியாகப் புரிந்து கொண்டு அதற்கேற்ற வகையில் தமிழ்த் தலைமைகள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் செயற்பட வேண்டியது இன்றைய காலத்தின் தேவையாகும்.
செல்வரட்னம் சிறிதரன்