வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியில் நிலவும் வலுவான தாழமுக்கம், திருகோணமலையில் இருந்து சுமார் 750 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ளது.
இது மேலும் தீவிரமடைந்து எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் சூறாவளியாக உருவாகும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதன் காரணமாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு, வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் கோரியுள்ளார்.
பொத்துவில் தொடக்கம் மட்டக்களப்பு, திருகோணமலை ஊடாக காங்கேசந்துறை வரையான கரையோரத்துக்கு அப்பால் உள்ள ஆழமான கடற்பிராந்தியங்களுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேலும் மேலும் வலுவடைந்து புயலாக மாறவுள்ளதால் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டியுள்ள மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிக்கு சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாள்களில் மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.