எதிர்வரும் திங்கட்கிழமையன்று புதிய அரசாங்கம் அமைக்கப்படும். ஜனாதிபதியாக நாம் தொடர்ந்து செயற்படுவேன் எனத் தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய தேசிய முன்னணியினர் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிக்க வேண்டும் என்று கோரினால் என்னால் ஒன்றும் செய்ய முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
உயர் நீதிமன்ற தீர்ப்பையடுத்து நேற்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பின்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
மேலும் ஜனாதிபதியாக நான் இருக்கும் வரையில் ரணிலுக்கு எதிரான நிலைப்பாட்டிலேயே நான் செயற்படுவேன். ஆனால், ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் இணைந்து கொள்ளவிரும்புபவர்கள் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்றும் அவர் இதன்போது கூறினார்.
இந்த நிலையில் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நேற்றிரவு இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தின்போது ஜனாதிபதியின் நிலைப்பாடு தொடர்பாக ஆராயப்பட்டது.
அரசாங்கத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் இணைந்து கொள்ள விரும்பினால் அவர்களை ஏற்றுக்கொள்வது என்றும் ஆனால், கடந்த காலங்களை போன்று சம அந்தஸ்து கோர முடியாது என்றும் ரணில் விக்கிரமசிங்கவை தொடர்ந்தும் விமர்சிப்பதற்கு அனுமதிக்க முடியாது என்றும் இங்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சுதந்திரக் கட்சியினர் ஒரு குழுவாக வருவார்களாயின் அவர்களை புதிய கூட்டணியில் இணைத்து கொள்வதற்கும் இந்தக் கூட்டத்தில் உடன்பாடு காணப்பட்டது. ஆனாலும், சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.பி.திஸாநாயக்க, டிலான் பெரேரா, திலங்க சுமதிபால ஆகியோரை மீளவும் அரசாங்கத்தில் இணைத்துக்கொள்வதற்கு இந்தக் கூட்டத்தில் பெரும்பாலானா உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் 17ஆம் திகதி திட்டமிட்டபடி கொழும்பில் ஆர்ப்பாட்டத்தினை நடத்துவது என்றும் அதற்குள் அரசாங்கம் அமைக்கப்பட்டால் அதனை வெற்றிக் கொண்டாட்டமாக மேற்கொள்வது என்றும் அரசாங்கம் அமைப்பதற்கு ஜனாதிபதி அனுமதியளிக்காது இழுத்தடிப்புக்களை மேற்கொண்டால் ஜனாதிபதி செயலகத்தை சுற்றி வளைக்கும் வகையிலான ஆர்ப்பாட்டமாக அதனை மேற்கொள்வது என்றும் இங்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான கூட்டத்தில் பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்கப்போவதில்லை என்று ஜனாதிபதி தெரிவித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.
இவ்வாறு ஜனாதிபதி கருத்து கூறவில்லை என்று சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியினருக்கு தகவல் அனுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
திங்கட்கிழமை அரசாங்கம் அமையுமென்றும் சுதந்திரக் கட்சியில் விரும்பியவர்கள் அரசாங்கத்தில் இணைந்து கொள்ளலாம் என்றும் மஹிந்த தரப்புடன் இணைந்து செயற்பட விரும்புபவர்கள் அவ்வகையில் செயற்படலாம் என்றும் ஜனாதிபதி கூறியதாக சுதந்திரக் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
புதிய அரசாங்கம் அமைக்கப்படுமாயின் பிரதமர் தணித்து முடிவுகளை எடுக்காது அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்கள் குழுவாக செயற்பட்டு முடிவுகளை எடுக்க வேண்டும் என்று ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளதாகவும் தெரிகின்றது. இந்த விடயம் குறித்தும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.