மஹிந்த ராஜபக்ஷ தாக்கல் செய்த விசேட மேன்முறையீட்டு மனுவானது இன்றைய தினம் உயர் நீதிமன்றில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
பிரதமர் பதவியிலும் அமைச்சர் பதவியிலும் கடமைகளை முன்னெடுக்க தனக்கு மேன் முறையீட்டு நீதிமன்றம் விதித்துள்ள இடைக்கால தடையை நடை முறைப்படுத்துவதை தடுக்கும் முகமாக உத்தரவொன்றினை பிறப்பிக்குமாறு கோரி, மஹிந்த ராஜபக்ஷ தாக்கல் செய்த விஷேட மேன் முறையீட்டை இன்று வெள்ளிக்கிழமை பரிசீலனைக்கு எடுக்க உயர் நீதிமன்றம் நேற்று தீர்மானித்தது.
அத்துடன் அமைச்சர்களாக பதவி வகித்த ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, சமல் ராஜபக்ஷ , தினேஷ் குணவர்தன மற்றும் விஜேதாஸ ராஜபக்ஷ ஆகியோரும் தாம் அமைச்சுப் பதவிகளில் தொடர விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடையை செயற்படுத்துவதை தடுக்கும் வகையில் உத்தரவொன்றினை பிறப்பிக்குமாறு கோரியுள்ள விஷேட மேன் முறையீட்டையும் அன்றைய தினமே பரிசீலிப்பதாக உயர் நீதிமன்றம் அறிவித்தது.
இவ்விரு விஷேட மேன் முறையீடுகளும் நேற்றுமுன்தினம் முதல் முறையாக உயர் நீதிமன்றின் 403 ஆம் விசாரணை அறையில் ஆராயப்பட்டது. இதன்போதே பிரியந்த நீதியரசர் பிரியந்த ஜயவர்தன தலைமையிலான பிரசன்ன ஜயவர்தன , எல்.டி.பி. தெஹிதெனிய ஆகியோர் அடங்கிய மூவர் கொண்ட நீதியரசர்கள் குழுவே இதனை அறிவித்தது.
இதேவேளை பாராளுமன்றத்தை கலைப்பதற்கான ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலுக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில் இன்றைய தினம் உயர்நீதிமன்றத்தில் நடைபெறும் மஹிந்த தரப்பின் மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை முடிந்த பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.