எது எப்படிப் போனாலும் ரணில் விக்ரமசிங்கவுக்கு பிரதமர் பதவியை வழங்குவதில்லையென ஜனாதிபதி உறுதியாக தெரிவித்ததாகவும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 23 பாராளுமன்ற உறுப்பினர்களையும் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் பங்குதாரர்களாக வேண்டாம் என ஜனாதிபதி கூறியதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
ஜனாதிபதி செயலகத்தில் நீதிமன்றத் தீர்ப்பின் பின்னர் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.
நாளை (14) உயர்நீதிமன்றத்தில் நடைபெறும் மஹிந்த தரப்பின் மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை முடிந்த பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் இன்று நடைபெற்ற குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாகவும் லக்ஷ்மன் யாபா அபேவர்தன குறிப்பிட்டார்.
ரணில் விக்ரமசிங்கவல்லாத ஒருவரை பிரதமராக ஏற்கப் போவதில்லையென்ற தீர்மானத்தில் ஐக்கிய தேசிய முன்னணி இருக்கையில், ஜனாதிபதி பிடிவாதமாக மீண்டும் அக்கருத்தையே கூறியிருப்பது அரசியல் சிக்கல் நிலைமையை ஏற்படுத்தும் என்பது பெருப்பாலானோரின் எதிர்பார்ப்பாகும்.