ரணில் விக்கிரமசிங்கவை உள்வாங்கிய நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட்ட பிரதான எதிர் கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பு சமீபகாலமாக ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்திற்கும், ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக தெரிவு செய்வதற்கும் ஒத்துழைப்பு வழங்கி வருவது தமிழ் மக்கள் மத்தியில் ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளரும், மஸ்கெலியா பிரதேச சபையின் உப தவிசாளருமான பெரியசாமி பிரதீபன் தெரிவித்தார்.
இன்று ஹட்டனில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் காரியாலயத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
வட, கிழக்கு தமிழ் மக்களது உரிமைகள் கோரிக்கைகள் தொடர்பில் தொடர்ச்சியாக அழுத்தங்களை பிரயோகித்தது மட்டுமல்லாமல் தமிழ் அரசியல் கைதிகளின் விடுவிப்பு, தமிழ் மக்களது காணி விடுவிப்பு தொடர்பில் எல்லாம் அரசாங்கத்திற்கு அழுத்தத்தை பிரயோகித்து வந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு இலங்கை மட்டுமல்லாமல் சர்வதேச ரீதியிலும் ஒரு தனித்துவ கௌரவத்தை உள்வாங்கி செயற்பட்டது.
சமீபகாலமாக கட்சி கொள்கைகளிலிருந்து விடுப்பட்டு பணத்திற்கு விலை போகியுள்ளதோ என தமிழ் மக்கள் மீது சந்தேகம் நிலவுகிறது. தனது சுய இலாபத்திற்காக தமிழ் மக்களை காட்டிக் கொடுக்கின்றதா தமிழ் தேசிய கூட்டமைப்பு என்று கேள்வி எழுப்பியதோடு, தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குரிய சுய கௌரவத்தையும், அதற்குரிய அந்தஸ்த்தையும் தக்க வைத்து பாதுகாக்க வேண்டிய ஒரு பொறுப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பை சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒரு முக்கிய பொறுப்பாகும்.
அத்தோடு, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய தேசிய கட்சியினூடாக ஒரு நிபந்தனையில்லாத உடன்படிக்கை செய்துள்ளதாக தகவல்கள் வெளிவருகிறது. இவ்விடயத்தை பகிரங்கப்படுத்துமாறு பெரியசாமி பிரதீபன் இவ் ஊடக சந்திப்பில் கேட்டுக்கொண்டார்.