யாழில் அகிம்சைக்கு விழா எடுக்க நடராஜனுக்கு என்ன அருகதை இருக்கிறது?

381 0

unnamed987 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை தியாக தீபம் திலீபன் அவர்களை அணுவணுவாக உருக்கி கொன்றொழித்து விட்டு, அந்த மாவீரன் உதித்த யாழ். மண்ணிலேயே அகிம்சா தினத்தை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி கொண்டாடுகிறார் யாழ். இந்தியத் துணைத் தூதுவர் ஆர். நடராஜன்.

அகிம்சை வழியில் விடுதலை அடைந்த இந்திய தேசம் அதே வழியில் விடுதலை அடைய துடிக்கின்ற ஈழத் தமிழினத்தின் அகிம்சைப் போராட்டத்துக்கு மதிப்பளிக்கும் என்று தியாக தீபம் திலீபன் முழுக்க முழுக்க நம்பி இருந்தார். அதனடிப்படையில் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நல்லூர்க் கந்தன் முன்றலில் ஒரு சொட்டு நீர் கூட அருந்தாது, உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தார்.

ஆனால், அப்போதைய இந்தியத் தூதரோ, ஏனைய இந்திய அதிகார வர்க்கத்தினரோ திலீபனை ஏறெடுத்தும் பார்க்காமல், அவரின் தியாகத்தையும் கொச்சைப்படுத்தும் ஈனச் செயலில் ஈடுபட்டனர். ஆனாலும் தன் கொள்கையில் உறுதியாக இருந்த திலீபன் உலகத்துக்கே அகிம்சையைப் போதித்து விட்டு 26.09.1987 அன்று வீர மரணம் அடைந்தார்.

உலகத் தமிழர்களைப் பொறுத்தவரை அகிம்சை தினமென்றால் அது தியாக தீபம் திலீபன் உயிர்நீத்த செப்டெம்பர் 26 தான். அதனை யாராலும் மாற்ற முடியாது என்பதனை நடராஜன் புரிந்து கொள்ள வேண்டும்.
அகிம்சை என்றாலே அதன் அர்த்தம் என்னவென்று தெரியாத இந்தியா திலீபனின் உச்சபட்ச தியாகத்தை மூடி மறைக்கும் நோக்குடன் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி யாழில் வலிந்து திணிக்கும் அகிம்சை விழா கேளிக்கைக்கும், அவமானத்துக்கும் உரியது.

உலகத்துக்கே அகிம்சையின் மகத்துவத்தை போதித்த திலீபன் பிறந்த மண்ணான யாழில், அகிம்சைக்கு விழா எடுக்க இந்தியத் துணைத் தூதுவர் நடராஜனுக்கு என்ன அருகதை இருக்கிறது?23 வயது மருத்துவபீட மாணவனான திலீபனை துடிக்க துடிக்க கொன்றவர்கள் தானே நீங்கள்?

இந்திய அரசு அன்று இழைத்த வரலாற்றுத் துரோகத்தை மறைக்க யாழில் நீங்கள் எப்படித் தான் சுழன்று சுழன்று வேலைகள் பார்த்தாலும், அந்த துரோகத்தை கடைசி ஈழத் தமிழன் உள்ளவரை மறக்கவும் மாட்டான். மன்னிக்கவும் மாட்டான்.