எம்பிலிப்பிட்டிய – இரத்தினபுரி பிரதான வீதியில் இலக்கம் 96 விவசாய மத்திய நிலையத்துக்கு அருகில் பயணித்த தனியார் பஸ் மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து ஆத்திரமடைந்த பிரதேசவாசிகள் விபத்திற்கு காரணமான பஸ்ஸை தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.
நேற்று புதன்கிழமை இரவு 8.20 மணியளவில் எம்பிலிப்பிட்டிய பகுதியிலிருந்து இரத்தினபுரி பகுதி நோக்கி பயணித்த தனியார் பஸ் அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியமையினால் மேற்படி விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் மற்றும் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் உட்பட இருவரும் எம்பிலிபிட்டிய வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 37 வயதுடைய எம்பிலிப்பிட்டிய பகுதியை சேர்ந்த நுவன் சஞ்சீவ என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக எம்பிலிப்பிட்டிய வைத்திய சாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதே வேளை விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றுமொரு நபர் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையிலேயே பிரதேச வாசிகள் மேற்படி பஸ்ஸை நேற்றிரவு 9.30 மணியளவில் தீயிட்டு கொளுத்தியுள்ளனர். பஸ் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், குறித்த சம்பவத்தின் போது பஸ்ஸில் பெல்மடுல்ல பகுதியை சேர்ந்த 20 பேர் வரையில் பயணித்ததோடு அவர்கள் யாத்திரை சென்று மீண்டும் திரும்பிக்கொண்டிருந்தவர்கள் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
அத்துடன், விபத்திற்கு காரணமான பஸ் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பஸ்ஸிற்கு தீயிட்டோர் தொடர்பிலான விசாரணைகளை எம்பிலிப்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.