ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் கொண்டுவரப்படும் நம்பிக்கை பிரேரணையை ஆதரிப்பதா? இல்லையா என்பது குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்றுகாலை கூடி முடிவொன்றினை எடுக்கவுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் இன்றுகாலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழு கூடுகின்றது. இந்தக் கூட்டத்தில் இவ்விடயம் குறித்து ஆராயப்பட்டு தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.
ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தை மீண்டும் கொண்டுவருவதற்கும் அந்த முன்னணியினால் பிரேரிக்கப்படும் ஒருவரை பிரதமராக நியமிப்பதற்கும் தாம் ஆதரவு வழங்குவதாக 14 கூட்டமைப்பு எம்.பி.க்களும் கையெழுத்திட்டு ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியிருந்தனர். இந்த நிலையில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவான பிரேரணைக்கு கூட்டமைப்பினர் ஆதரவு வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
பாராளுமன்றத்தில் இன்று ஐக்கிய தேசிய கட்சி இரண்டு பிரேரணைகளை முன்வைக்கவுள்ளது. இதில் ஜனாதிபதி நியமித்த பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவின் மீதும் அவரது அமைச்சரவை மீதும் நம்பிக்கை இல்லை என ஜே.வி.பி கொண்டுவந்த பிரேரணை கடந்த நவம்பர் மாதம் 14 ஆம் திகதி பாராளுமன்றத்தில் 121 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதுடன் மஹிந்த ராஜபக்ஷவின் உரை மீதான நம்பிக்கையில்லா பிரேரணையும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரும் பிரேரணை ஒன்றிணை ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள் முன்வைக்கவுள்ளனர்.
இந்தப் பிரேரணை கடந்தவாரம் சமர்ப்பிக்கப்படவிருந்தபோதிலும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்குஅமைய இன்றையதினம் அது சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்த பிரேரணையை தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஜே.வி.பி.யும் ஆதரிக்கவுள்ளன.
பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு பெரும்பான்மையை நிரூபிக்கும் பிரேரணையை அக்கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச கொண்டுவருகின்றார். அந்த பிரேரணையை ஜே.வி.பி ஆதரிக்கப்போவதில்லை என ஏற்கனவே கூறியுள்ளது. இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கவில்லை என அக்கட்சியின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.