உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் 2 கட்டமாக நடைபெற உள்ள நிலையில் அதில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் (அக்டோபர்) 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது.
12 மாநகராட்சிகளில் போட்டியிடும் வார்டு உறுப்பினர்கள் பட்டியலை முதல் கட்டமாக அ.தி.மு.க. அறிவித்தது. தி.மு.க. அனைத்து மாவட்டங்களிலும் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விருப்ப மனுக்களை பெற்று நேர்காணல் நடத்தி வருகிறது.
அந்தந்த மாவட்ட செயலாளர்கள் தலைமையில் நடந்து வரும் நேர்காணல் இன்று நிறைவடைகிறது. ஒரு சில இடங்களில் போட்டியிடுவதற்கு ஒன்றிற்கும் மேற்பட்டவர்கள் ஆர்வம் காட்டிய போதிலும் அவர்களை மாவட்ட நிர்வாகிகள் சமாதானப்படுத்தினர்.அனைத்து தி.மு.க. மாவட்டங்களில் பெறப்பட்ட விருப்ப மனுக்கள் இறுதி செய்யப்பட்டு இன்று மாலை தலைமைக்கு அனுப்பப்படுகிறது.
அதனை தி.மு.க. தலைவர் கருணாநிதி, பொதுச் செயலாளர் அன்பழகன் பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் சரிபார்ப்பார்கள்.மாவட்டம் வாரியாக ஒவ்வொரு பொறுப்புகளுக்கும் விண்ணப்பித்துள்ளவர்களின் பட்டியலை ஆய்வு செய்த பின்னர் வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்படுகிறது.அனைத்து பதவிகளுக்கும் உரிய வார்டு உறுப்பினர் படடியலை கருணாநிதி நாளை (29-ந்தேதி) அறிவிப்பார் என்று கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
இதுகுறித்து அந்த நிர்வாகி கூறுகையில், கட்சியில் ஒரு சில இடங்களில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் ‘சீட்’ கேட்டு வற்புறுத்தினாலும் அவர்களை மாவட்ட அளவில் நிர்வாகிகள் வேறு வாய்ப்புகளை தருவதாக கூறி சமாதானம் செய்துள்ளனர்.அதனால் வேட்பாளர் பட்டியல் எந்த குழப்பமும் இல்லாமல் வெளியிடப்படும். வேட்புமனுக்கள் தாக்கல் செய்வதற்கு 3-ந்தேதி வரை கால அவகாசம் இருக்கிறது.
ஒருவேளை நாளை வெளியிட தாமதம் ஆனால் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) வேட்பாளர் பட்டியல் வெளியாவது உறுதி என்றார்.கூட்டணிகளுக்கு ஒரு சில இடங்களை ஒதுக்கி விட்டு பெரும்பாலான இடங்களில் தி.மு.க.வே போட்டியிடும்.சென்னையில் 200 வார்டுகளுக்கும் தி.மு.க. சார்பில் போட்டியிட வட்ட செயலாளர்கள், பகுதி செயலாளர்கள் அதிகளவில் மனு கொடுத்துள்ளனர். இதில் யார்-யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பது நாளை தெரிந்து விடும்.
அ.தி.மு.க. வேட்பாளர்களை எதிர்கொள்ள கூடியவரும், அதே நேரத்தில் மக்களின் நன்மதிப்பை பெற்றவர்களையும் தலைமை நிறுத்த முடிவு செய்துள்ளது.