அரசியல் நெருக்கடி நீடித்துவரும் நிலையில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பினை 14 ஆம் திகதிக்குள் வழங்குமாறு கோருவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆகியவற்றை உள்ளடக்கிய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்களின் கூட்டத்தில் இதற்கான அறிவிப்பினை ஜனாதிபதி விடுத்துள்ளார்.
சட்டமா அதிபர் மூலம் பிரதம நீதியரசர் மூலம் இன்றைய தினம் இந்தக் கோரிக்கையை முன்வைக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அதேபோல் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி இணைந்த கூட்டணி ஒன்றினை அமைக்கவும் மைத்திரி -மஹிந்த தரப்பு இணக்கம் கண்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் மஹிந்த ராஜபக் ஷ தலைமையில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கிடையில் நேற்று பிற்பகல் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றது.
ஏற்கனவே நேற்று முன்தினம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி உறுப்பினர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். அதனை அடுத்து ஜனாதிபதியை சந்தித்து நிகழ்கால அரசியல் நிலைமைகள் மற்றும் அடுத்த கட்ட அரசியல் நகர்வுகள் குறித்தும் அரசியல் பயணம் தொடர்பிலும் கலந்துரையாடுவதற்கு தீர்மானித்தனர்.
இந்நிலையில் நேற்று ஜனாதிபதியை சந்தித்து மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் கலந்துரையாடியிருந்தனர். ஜனாதிபதி செயலகத்தில் சுமார் இரண்டு மணிநேரம் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
இதன்போது தற்போது நீடித்துவரும் அரசியல் நெருக்கடி குறித்தும் நீதிமன்ற தீர்ப்பு தொடர்பிலும் ஆழமாக கலந்துரையாடப்பட்டுள்ளது. புதிய பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ மற்றும் அவரது அமைச்சரவை மீது நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ள நிலையில் அடுத்த கட்டமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இதன்போது ஆராயப்பட்டுள்ளது.