சீனாவின் புயூஜியான் மாகாணத்தை மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் தாக்கிய அதிவேகப் புயலுக்கு நான்கு பேர் பலியாகியுள்ள நிலையில் அங்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவை இந்த மாதத்தில் மட்டும் இருபுயல்கள் சூறையாடியுள்ள நிலையில் மணிக்கு சுமார் 120 கிலோமீட்டர் வேகத்தில் சீனாவை நெருங்கி கொண்டிருந்த ’மெகி’ புயல் அந்நாட்டின் வடமாகாணமான பியூஜியான் அருகே இன்று அதிகாலை சுமார் 4.40 மணியளவில் கரையை கடந்தது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இம்மாகாணத்தின் கரையோரப் பகுதிகளில் வசித்துவந்த ஒருலட்சத்துக்கும் அதிகமானவர்கள் நேற்று பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற சுமார் 31 ஆயிரம் படகுகள் உடனடியாக கரைக்கு திரும்பி வருமாறு எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. நேற்று மாலைமுதல் பியூஜியானில் இருந்து புறப்பட்டு செல்லும் 24 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், பலத்த மழையுடன் இன்று அதிகாலை கரையை கடந்த புயல் உண்டாக்கிய பாதிப்புக்கு நான்குபேர் பலியானதாகவும், ஐநூறுக்கும் அதிகமானவர்கள் காயம் அடைந்ததாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மழையைதொடர்ந்து மாகாணத்தின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளதால் பியூஜியான் எல்லைக்குட்பட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.