158-வது வார்டு வேட்பாளரை மாற்றக்கோரி செல்போன் டவரில் ஏறி 3 அ.தி.மு.க.வினர் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் 2 நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.
இதில் ஆலந்தூர் தொகுதியில் 158-வது வார்ட்டில் வேட்பாளராக கவிதா சந்திரசேகர் அறிவிக்கப்பட்டார். இவரது கணவர் சந்திரசேகர்தான் தற்போது 158-வது வார்டு கவுன்சிலராக உள்ளார். காஞ்சி கிழக்கு மாவட்ட இளைஞரணி செயலாளராகவும் உள்ளார்.
158-வது வார்டு பெண்கள் வார்டாக அறிவிக்கப்பட்டதால் சந்திரசேகர் தனது மனைவி கவிதாவுக்கு சீட் கேட்டு விண்ணப்பித்தார்.இதே போல் 158-வது பகுதி அ.தி.மு.க. வட்ட செயலாளர் பர்மா கண்ணனும் தனது மனைவி அவ்வை நாச்சியாருக்கு சீட் கேட்டு இருந்தார்.இதில் கவிதாவுக்கு சீட்டு கிடைத்தது. இதனால் பர்மா கண்ணன் தரப்பினர் அதிருப்தி அடைந்தனர்.
இந்த நிலையில் இன்று 7.30 மணிக்கு நந்தம்பாக்கம் வர்த்தகம் மையம் எதிரே உள்ள 100 அடி உயர செல்போன் டவரில் பர்மா கண்ணனின் தம்பி மணிகண்டன் பாபு, உறவினர்கள் தினகரன், தேவகுமரன் ஆகியோர் 3 பேர் ஏறி 158-வது வார்டு அ.தி.மு.க. வேட்பாளர் கவிதாவை மாற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை பார்த்த பொதுமக்கள் அங்கு திரண்டனர். இதனால் பெரும் பரபரப்பு நிலவியது.
உடனே உதவி கமிஷனர் விஜயகுமார் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். தீயணைப்பு படை வீரர்களும் வரவழைக்கப்பட்டனர்.3 பேரையும் கீழே இறங்கி வரும்படி போலீசார் கூறினார்கள். ஆனால் கீழே இறங்க மறுத்து அவர்கள் தங்களை பிடிக்க செல்போன் டவரில் யாராவது ஏறினால் கீழே குதிப்போம் என்று தற்கொலை மிரட்டல் விடுத்தனர்.
மாவட்ட செயலாளர் வந்து வேட்பாளர் மாற்றப்படுவார் என்று உறுதி அளித்தால்தான் கீழே இறங்கி வருவோம் என்று கூறினார்கள். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே 162-வது வட்ட செயலாளர் பெரிய நாயகம், 163-வது வட்ட ஆலந்தூர் தொகுதி துணைத் தலைவர் லோகேஷ் ஆகியோரும் தங்கள் வார்டுகளில் அறிவிக்கப்பட்ட வேட்பாளரை மாற்றக்கோரி செல்போன் டவரில் ஏறப்போவதாக கோஷம் போட்டனர். உடனே அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.