காவிரி நீர் உரிமையை விட்டுத்தரக் கூடாது என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் சம்பா சாகுபடிக்காக இன்று முதல் காவிரியில் 3 நாட்களுக்கு வினாடிக்கு 6000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது.அதுமட்டுமின்றி, காவிரி நீர்ப்பகிர்வு குறித்து இப்போது ஏற்பட்டுள்ள சிக்கலுக்கு தீர்வு காண்பதற்காக இரு மாநிலங்களின் முதல்- அமைச்சர்களை அழைத்து பேசும்படி மத்திய அரசுக்கு ஆணையிட்டுள்ளது.
காவிரி சிக்கலில் நடுவர் மன்றம் தெளிவான தீர்ப்பை வழங்கி விட்ட நிலையில், அதை நடைமுறை படுத்துவது தான் இயல்பானதாகவும், சரியானதாகவும் இருக்க முடியும். மாறாக மீண்டும் பேச்சு நடத்தினால் அது காவிரி பிரச்சினையை 25 ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் செல்லும் ஆபத்து உள்ளது.
அதனால் தான் காவிரி பிரச்சினை குறித்து கர்நாடகத்துடன் எந்த பேச்சும் நடத்தக் கூடாது என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. எனினும், காவிரி பிரச்சினை பற்றி இரு மாநில அரசுகளையும் அழைத்து பேசும்படி உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ள நிலையில், அதை ஏற்று பேச்சு நடத்துவது தான் சரியானதாக இருக்கும்.
அதை உணர்ந்து டெல்லியில் நாளை நடை பெறும் பேச்சுக்களில் தமிழகம் பங்கேற்கவிருப்பது சரியானதாகும். அதே நேரத்தில் இந்த பேச்சுக்களால் எந்தவித பின்னடைவும் ஏற்படாத வகையில் தமிழக அரசு எச்சரிக்கையுடனும், விழிப்புடனும் செயல்பட வேண்டும்.
காவிரி பிரச்சினை தொடர்பாக இரு மாநில அரசுகளையும் அழைத்துப் பேசும்படி மத்திய அரசுக்கு ஆணையிட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு அதன் நோக்கத்தை தெளிவாக தெரிவித்திருக்கிறது.
அந்த வகையில் காவிரி பிரச்சினையில் தமிழகத்தின் பக்கம் உள்ள நியாயத்தையும், கர்நாடக அரசு செய்து வரும் அடாவடிகளையும் நன்றாக உணர்ந்துள்ள நீதிபதிகள், இவ்வழக்கில் இறுதித் தீர்ப்பு அளிப்பதற்கு முன் கடைசி வாய்ப்பாக இப்பேச்சுக்களை நடத்த ஆணையிட்டிருப்பதாகவே தோன்றுகிறது.
எனவே, நாளைய பேச்சுக்களின் முடிவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் காவிரி சிக்கலில் தமிழகத்திற்கு உள்ள உரிமைகளை ஆதாரங்களுடன் தமிழக அரசுக் குழுவினர் வலியுறுத்த வேண்டும்.
உச்சநீதிமன்றம் ஆணையிட்டவாறு அக்டோபர் 20-ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், உச்சநீதிமன்றம் ஆணையிட்டவாறு காவிரியில் வினாடிக்கு 6000 கனஅடி வீதம் அடுத்த 3 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும்.
மேகதாது பகுதியில் புதிய அணை கட்டும் திட்டத்தைக் கைவிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை தமிழக அரசுத்தரப்பு ஆதாரங்களுடன் முன்வைக்க வேண்டும்.
கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள 4 அணைகளுக்கும் நேற்று இரவு நிலவரப்படி வினாடிக்கு 10,879 கன அடி தண்ணீர் வருவதையும், அணைகளின் நீர் இருப்பு கடந்த ஒரு வாரத்தில் 5 டி.எம்.சி. உயர்ந்து 30.53 டி.எம்.சி.யாக அதிகரித்திருப்பதையும் சுட்டிக்காட்டி தமிழகத்திற்கான தண்ணீர் பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும்.
அதேநேரத்தில் தமிழகத்தின் உரிமைகளை தாரைவார்க்கும் எந்த முடிவுக்கும் தமிழக அரசு ஒப்புக் கொள்ளக்கூடாது. அது போராடிப் பெற்ற நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு உள்ளிட்ட உரிமைகளை பறித்துவிடும் என்பதால் இந்த விஷயத்தில் தமிழக அரசு மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.