வவுனியா கோமரசங்குளம் ஜேசுபுரம் கிராமத்தில் ஆர்ப்பட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஜேசுபுரம் கிராமத்தில் இயங்கி வருகின்ற கற்குவாரியினை நிறுத்தக்கோரியே அப்பிரதேச மக்களால் இவ் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இக்கற்குவாரியினால் இப்பிரதேசத்தில் வாழும் மக்கள் பல்வேறு அசௌகரியங்களிற்கு முகம்கொடுத்துள்ளனர்.
இக்கற்குவாரியில் வெடிபொருட்களை பயன்படுத்தி கற்களை உடைக்கும் போது ஏற்படும் அதிர்வு மற்றும் மேல் எழுந்து வரும் பாறைத்துண்டுகள் காரணமாக வீடுகள் சேதமாவதடன், கால்நடைகளிற்கு காயமேற்படுவதோடு இறக்கின்ற சந்தர்ப்பமும் ஏற்பட்டுள்ளது.
மேலும் கல்குவாரியில் இருந்து கற்களை ஏற்றிச்செல்லும் பாரவூர்திகளினால் இப்பிரதேச வீதிகள் சேதமாகியுள்ளதனால் இப்பாதையை பயன்படுத்துகின்ற மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் பெரும் அசௌகரியத்தை எதிர் நோக்கி வருகின்றனர்.
குறிப்பாக இப்பிரதேசத்தின் பிரதான நீர்ப்பாசன குளமான சின்ன கோமரசங்குள கலிங்கும் இதன் தாக்கத்தினால் வெடிப்புக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான தாக்கங்களை ஏற்படுத்தி வருகின்ற கற்குவாரியினை ஏற்கனவே நிறுத்தக்கோரி இம்மக்களினால் வேன்டுகோள் விடுக்கப்பட்டதற்கு இணங்க நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது கடந்த இரண்டு மாதங்களாக மீண்டும் இக்கற்குவாரியின் செயற்பாடு இடம்பெற்று வருகின்றது.
பிரதேசசபையினால் நிறுத்தக்கோரி உத்தரவு பிறப்பித்த நிலையிலும் இக்குவாரி இயங்கி வருவதனை உடனடியாக நிறுத்துமாறு இம்மக்கள் கோரிக்கையை முன்வைத்தே இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்னர்.