சாணக்கியர்களல்ல ஜின்னாக்களே தேவை – மா.பாஸ்கரன்

411 0

காற்று எப்போதும் ஒரே திசையில் வீசுவதுமில்லை. காலச்சக்கரம் எப்போதும் ஒரே இடத்தில் நிற்பதும் இல்லை. இதற்கு ஈழத்தீவே சாட்சியாகவும் காட்சியாகவும் இருக்கிறது. நேற்றைய பகைவர் கைகோர்ப்பதும் இன்றைய நண்பர்கள் பகையாவதும் உலக ஓட்டத்தில் கடந்து செல்லும் காட்சிகளானபோதும், இவர்களுக்கிடையே சிக்குண்டு சின்னாபின்னாமாகிப் பலியாகுவது சனநாயகமும் அதற்காக வாக்களித்த அப்பாவி மக்களுமே என்றால் மிகையன்று. புத்தியாளரென்று மகுடம் சூடிச் சிங்களவரைக் காத்ததன் விளைவாகத் தமிழினம் படும் துயரத்தைப் பட்டறிவாகக் கொள்ளாத தலைமைகள், அன்று சிங்களத்தைப் பிரித்தானியா சென்று காத்த தமிழ் தலைமையும், இன்று ஐநா வரை சென்று காத்துவரும் தமிழ்த் தலைமைகளும் ஒரே புள்ளியிற் பயணிப்போராக உள்ள சூழலில் மீதமிருக்கும் தமிழினத்தையும் நிலங்களையும் எப்படிக் காக்கப் போகின்றனர் என்பது ஒவ்வொரு தமிழரிடத்தும் தோன்றும் வினாவாகும். ஈழத்தீவிலிருத்து தமிழினத்தை துடைத்தளிப்பதற்கான அனைத்து நகர்வுகளிலும் கரம்கோர்த்துச் செயற்படும் சிங்களம் தனக்குள் மோதும்போதுகூடத் தமிழினத்தின் உரிமைகளை மறுதலிக்கும் முன்மொழிவுகளையே செய்கின்றது. ஆனால், தமிழரது வாக்குப்பலத்தால் நாடாளுமன்றம் சென்ற சாணக்கியர்களோ சிங்கள ஆதிக்கவாதிகளுக்கு இடையே சமரசம் செய்துகொண்டு திரியும் நிலையை, இவர்கள் தெரிந்துகொண்டுதான் செய்கின்றார்களா அல்லது தெரியததுபோன்ற நடிப்பா என அறியாது தமிழினம் விழியகலப் பார்த்து நிற்கின்றது.

வரம்பற்ற அதிகாரத்தைக் கொண்ட சனாதிபதி ஆட்சிமுறையானது தன்சகபாடிகளின் ஆட்சிக்கே ஆபத்து விளைவிக்கின்றபோது தமிழருக்கான தீர்வோ அல்லது அதிகாரப் பகிர்வின் வழிகிடைக்கும் உரிமைகளையோ சிங்கள அரசுகள் நினைத்த மாத்திரத்தில் இல்லாமற் செய்வதும் சாத்தியமே என்ற உண்மைகளை உலக அரங்கிலே முன்வைப்பதற்கான களத்தைச் சிங்களமே திறந்துவிட்டுள்ள சூழலைச் சரியாகப் பயன்படுத்தாத தலைமைகளைத் தமிழனம் கொண்டுள்ளமையும் ஒரு சாபமே. சிங்களத்தைச் சமரசம் செய்ய ஒதுக்கிய நேரத்தைப்போன்று, தமக்கு வாக்களித்த மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்காவது தீர்வு காணச் செலவிட்டிருப்பார்காளா? சமரசத்துக்காக ஓடியோடித்திரியும் இவர்கள் எமது மக்களுக்காக ஓடியிருப்பின் உலகநாடுகளின் கவனத்தையாவது பெற்றிருக்கலாமல்லவா? சிங்களத்துக்காக வெளிநாட்டுத் தூதுவர்களைச் சந்திப்பது, வழக்குத் தாக்குதல் செய்வது, அறிக்கையிடுவது என்று கலைக்கப்பட்ட அரசினது பங்காளராகவே இருப்பதுதான் தமிழினத்திற்கான சமகால அரசியலா?

இனத்தின் மீதான அக்கறையும், அவர்களின் துன்பத்தைக் களையவேண்டுமென்ற சிந்தனையும், இருந்திருந்தால், சிங்களத்தின் இன்றைய நிலையைக் கையாண்டு உடனடியான தீர்வுக்குட் கொண்டுவருதல் சாத்தியமற்றபோதும், தமிழினத்துக்குச் சாதகமானதாகச் சூழ்நிலையை நோக்கி நகர்த்துவதற்கு முயன்றிருக்கலாம். குறைந்தபட்சம் வெளிநாட்டுத் தூதுவர்களோடு ஒரு கலந்துரையாடலை மேற்கொண்டு சிறீலங்காவின் நாடாளுமன்றம் ஆட்சி அதிகாரப் போட்டியின் கரணியமாகச் சிங்களவருக்கே பாதகமானதாக உள்ளதென்றால், தமிழருக்கு எப்படித் தீர்வைத்தரும் என்பதை அழுத்தமாக முன்வைக்கலாம், ஏனென்றால் இதே மேற்குலகும் சேர்ந்தே யுத்தம் முடிவடைந்ததும் அரசியல் தீர்வென்று கூறியவர்கள். தெளிவாகச் சுட்டுவதாயின் புலிகளுக்கு இராணுவத் தீர்வு, தமிழருக்கு அரசியல் தீர்வென்றவர்கள். கடந்த ஒன்பது ஆண்டுகளில் தமிழருக்கான தீர்வில் ஒரு நூலளவிற்கூட நகரவில்லை. இந்த உலகாலும் நகர்த்த முடியவில்லை. நாடாளுமன்றில் ஒரு அசைவுமில்லை. தெரிவுக்குழு, நாடாளுமன்றை அரசியல் நிர்ணய சபையாக்குதல், புதிய அரசியல் அமைப்பினூடாகத் தீர்வுகாணல் போன்றவை வெறும் முன்மொழிவுகளாகி எல்லாமே காற்றில் பறக்கவிடப்பட்டுத் தேசிய இனப்பிரச்சினை தொடர்பாகச் சிங்களத்தின் பாரம்பரிய அணுகுமுறையே இங்கும் பின்பற்றப்பட்டுள்ளது.

ஓப்பந்தங்களை மீறுதல் கிழித்தல் எரித்தல் என்று தனிச்சிங்கள நாடாக்குவதை இலக்காகக் கொண்டு செயற்படுவதைப் பிரித்தானியரது வெளியேற்றத்தின் பின்னான கிழக்கு மாகாணத்தில் ஏற்றபடுத்தப்பட்ட திட்டமிட்ட குடியேற்றங்களும், தற்போதுவரை தமிழரது குடிப்பரம்பலை மாற்றியமைத்துத் தமிழரது மரபுவழித் தாயத்திலேயே தமிழ்பேசும் மக்களைச் சிறுபான்மையினராக்கி அரசியல் இருப்பை இல்லாதொழிக்கும் செயற்பாட்டைத் துரிமாகத் தொடர்வதோடு வெற்றிகண்டும் வருகிறது. போர்க் கரணியமாக இடம்பெயர்ந்த மக்கள் இன்னும் முழுமையாக மீள்குடியேற்றம் செய்யாத நிலையில், நாவற்குழிப் பகுதியிலே, அதாவது யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலிற் சிங்களவர்கள் குடியேற்றப்பட்டுள்ளமை ஒன்றே சிங்கள அரசுகளின் சிந்தனையைப் புரிந்தகொள்ளப் போதுமானது. ஆனால் சாணக்கியர்களோ இதுபோன்ற நிலப்பறிப்புகளுக்கும் குடியேற்றங்களுக்கும் நிதி ஆளணி எனத் தமிழருக்கு எதிராகத் தமிழினத்தை அழிக்கும் நோக்கிலான செயற்பாடுகளுக்குச் சட்ட அங்கீகாரத்தை வழங்கும் நாடாளுமன்றத்துக்காகப் பாடுபடுவதன் நோக்கம்தான் என்ன? இன்று வடமாகாணசபையிற்கூடச் சிங்களரவரது பிரதிநிதித்துவம் எப்படி வந்தது, எதனைச்சுட்டுகின்றது என்பதை ஏன் இவர்களாற் சிந்திக்கத் முடியாதுள்ளது.

தமிழரது மரபுவழித் தாயகம் எப்படிப் பறிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாகத் திருகோணமலை மாவட்டத்திலே ஏற்படுத்தப்பட்டுவரும் திட்டமிட்ட நில அபகரிப்பையும், குடிப்பரம்பல் மாற்றத்தையும் நாம் ஒருமுறை பார்ப்பதன் வழியே எதிர்காலத்திலே எமது நிலங்களைப் பாமரர் முதல் புத்தியாளர் வரை காப்பதற்காகச் சிந்திப்போராகவும் செயற்படுவோராகவும் இருக்கவேண்டிய காலமென்பதை கருத்திலே கொள்ளவேண்டியது அவசியமாகும் என்பதை இங்கு தொடர்ந்துவரும் தகவலினூடாக எமது நில இழப்பை நாம் புரிந்துகொள்ள முடியும். 1827இல் இருந்த மக்கட் தொகையையும்,தமிழர் 15,663(81.76%), முசுலிம் 3245(16.94%), சிங்களவர் 250(1.30%) முறையே 1946இல் இருந்த மக்கட் தொகையையும்,தமிழர் 33,795(44.51ம%), முசுலிம் 23,219(30.58ம%), , சிங்களவர்11,606(15.29ம%), முறையே, 2012இல் இருக்கும் மக்கட் தொகையையும், தமிழர் 122,080(32.29%), முசுலிம் 152,854(40.42%), சிங்களவர் 101,991(26.97%), என்ற இந்த மாற்றம் ஒன்றும் இயல்பானதாக நிகழவில்லை. திட்டமிட்ட நிலஅபகரிப்பு, குடியேற்றம், ஒருபுறமும் தமிழர்களை அச்சுறுத்தி வெளியேற்றியமை மறுபுறமுமாக நிகழந்தவையே. 18ஆம் நூற்றாண்டுக்கும் 21ஆம் நூற்றாண்டுக்கும் இடையேயான இந்த நில வள இழப்பைத் தமிழ் தலைவர்களும் தமிழீழ மக்களும் ஆழமாக நோக்க வேண்டும்.

தமிழருக்கு எந்தவொரு தீர்வையும் தராத நாடாளுமன்றைக் காப்பதற்குப் பதிலாகப் பதவிகளைத் துறந்துவிட்டு, மக்களை அணிதிரட்டி நீங்கள் உங்களுக்கான ஆட்சியை அமையுங்கள். ஆனால், எங்களையும் எங்கள் மக்களையும் தனியே வாழவிடுங்கள் என்று ஒரு மக்கள் போராட்டத்தை முன்னெடுத்திருப்பின் தனது நலன்சார்ந்து சிந்திக்கும் உலகை தமிழரது நிலையையையும் இணைத்துப் பார்க்கும் புள்ளியை நோக்கியாவது நகர்த்தியிருக்க முடியும். எங்கெல்லாம் மக்கள் திரள்நிலையடைந்து சனநாயகவழியூடே போராடுகிறார்களோ அங்குதான் உலகின் பார்வை திரும்பும். தமிழ்த் தலைமைகளாகட்டும், தமிழருக்குத் தலைமை தாங்கத்துடிக்கும் தமிழ்த் தலைமைகளாகட்டும் எந்தவொரு அரசியற் செயற்பாடுமற்ற வெற்று அறிக்கையரசியலால் அனைத்தும் மாறிவிடும் என்ற போக்கிலே அரசியல் செய்ய முற்படுவதும் ஒரு அவலமே.

அரசியல் என்பதோ இரத்தம் சிந்தாப்போர். போர் என்பதோ இரத்தம் சிந்தும் அரசியல். என்ற மா சே துங் அவர்களின் கூற்றைக் கூர்ந்து நோக்க வேண்டிய தருணமாகும். இரத்தம் சிந்தா அரசியற் போருக்கான களத்தைக் கையாளவோ, மக்களை அணிதிரட்டவோ முடியாத தலைமைகள் களத்திலிருந்து விலகி விடுவதும் கூட ஒரு நல்ல அரசியலே. வளர்ச்சி கண்ட சனநாயக அரசியற் பண்பும் அதுவே.

ஜின்னா அவர்கள் விடுதலைக்குக் கைகோர்த்தவாறே சரியான தருணத்திற் தீர்க்கமான முடிவெடுத்துத் தமது விடுதலையையும் உறுதிப்படுத்தியதனால் பாக்கிஸ்த்தானியராக உலகிலே நிமிர்ந்தார்கள். இல்லையேல் இன்னொரு காஸ்மீரத்தை உலகு கண்டிருக்கும். இனங்களின் இருப்புக்காகத் தமது சுயத்தைத் துறந்து தனிமனித விருப்பு வெறுப்புகளைப் புறந்தள்ளிக் கட்சிபேதங்களைக் கடந்து தேசத்தை மீட்ட இனங்கள் உலகிலே தம்மைத் தாமே நிர்வகித்து வளர்நிலையில் செல்லக் கல்தோன்றாக் காலத்து முன்தோன்றிய மூத்தகுடியோளூ குடிநிலமும் இன்றி அடிநிலமும் இன்றி அலைகின்ற நிலையிலும் இன்றைய அரசியற் புறநிலையிலும் பதவிக் கதிரைகளுக்காக அலையும் சாணக்கியர்களல்ல ஜின்னாக்களே தேவை என்பதே மெய்நிலையாகும்.
மா.பாஸ்கரன்
யேர்மனி.

Leave a comment