தற்பொழுது நடைபெறுவது பாராளுமன்ற கூட்டத் தொடர் அல்லவெனவும், பிரதமர், அரசாங்கம் இல்லாமல் பாராளுமன்றத்தில் பிரேரணைகள் நிறைவேற்ற முடியாது எனவும் மஹிந்த குழு பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
தற்பொழுது முறையான பாராளுமன்றக் கூட்டம் நடைபெறாமையினாலேயே நாம் அங்கு செல்வதில்லையென தீர்மானித்துள்ளோம். எப்போது பாராளுமன்றம் முறையாக நடைபெறுமோ அப்போது நாம் சமூகமளிப்போம்.
கணக்கிலெடுக்கப்படாத இந்தப் பாராளுமன்றத்தில் என்னதான் பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டாலும் அதற்குப் பெறுமானம் இல்லையெனவும் வாசுதேவ மேலும் கூறினார்.
ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையிலேயே வாசுதேவ நாணயக்கார இதனைக் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத மஹிந்த அரசாங்கத்துக்கு, சபையில் எந்தவொரு பிரேரணையும் முன்வைக்க முடியாத ஒரு நிலைமை காணப்படுகின்றது என்பதுவே உண்மையாகும். அதனாலேயே மஹிந்த ராஜபக்ஷ குழுவினர் பாராளுமன்றம் வருவதைப் புறக்கணித்து வருகின்றனர்.
முழுப் பூசனிக்காயை சோற்றில் மறைக்க இவர்கள் முயற்சிக்கின்றனர். நாட்டு மக்களை இந்த அரசியல் வாதிகள் இன்னும் முட்டாள்களாகவே பார்க்கின்றனர் என்பது கவலைக்குரிய அம்சமாகும்.