கூலிப்படையை ஒடுக்க வலியுறுத்தி நாளை ஆர்ப்பாட்டம்

539 0

201606270828265181_Mercenaries-control-demonstration-tomorrow-insisting_SECVPFகூலிப்படையை ஒடுக்க வலியுறுத்தி சென்னையில் நாளை (செவ்வாய்க்கிழமை) பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாக டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

தே.மு.தி.க. மருத்துவர் அணி துணை செயலாளர்கள் டாக்டர் முருகேஷ், செந்தில்குமார் உள்ளிட்டோர் பா.ஜ.க.வில் இணையும் நிகழ்ச்சி சென்னை தியாகராயநகரில் உள்ள பா.ஜ.க. மாநில தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில், பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு கட்சியில் இணைந்தவர்களை சால்வை அணிவித்து வரவேற்றார். பின்னர், அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கூறியதாவது:-

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கடுமையாக சீர்குலைந்துள்ளது கண்டிக்கத்தக்கதாகும். நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் சுவாதி என்ற பெண் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது மிகுந்த வேதனையளிக்கும் வகையில் உள்ளது. விவசாயிகள், வக்கீல்கள் என்று அடுத்தடுத்து பலர் கொலை செய்யப்பட்டுள்ளனர். கூலிப்படை ஆதிக்கம் அதிகரித்துள்ளது.

கூலிப்படையினருக்கு பணம் கொடுத்தால் கொலை செய்வது என்பது சகஜமாகி உள்ளது. எனவே, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும். பெண்களுக்கு முழு பாதுகாப்பு வழங்க வேண்டும். கூலிப்படையினரை ஒடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி 28-ந் தேதி(நாளை) காலை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பா.ஜ.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

தே.மு.தி.க. பா.ஜ.க.வில் இணைந்திருந்தால் இந்த முடிவு அவர்களுக்கு வந்திருக்காது. கட்சியினர் பிரிந்து சென்றிருக்க மாட்டார்கள். தலைமை எடுத்த தவறான முடிவால் நிர்வாகிகளை இழந்து தே.மு.தி.க. தவிக்கிறது. மக்கள் நலக்கூட்டணியில் இருந்து தே.மு.தி.க. வெளியேறியது மகிழ்ச்சியளிக்கிறது. உள்ளாட்சி தேர்தலில் நாங்கள் தனித்து போட்டியிட்டால் கூட வெற்றி பெறுவோம். எனவே, தேர்தல் நேரத்தில் எங்களுடன் இணைய விரும்பினால் கட்சிகளை வரவேற்போம்.

பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா வருகிற 10-ம் தேதி தமிழகம் வர இருக்கிறார். அன்றைய தினம் சென்னையில் நடைபெறும் பா.ஜ.க. ஊழியர்கள் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். மேலும் உள்ளாட்சி தேர்தலை எப்படி சந்திப்பது மற்றும் வெற்றி வியூகங்கள் குறித்து கட்சி நிர்வாகிகளுக்கு அவர் ஆலோசனை நடத்துகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment