ராஜஸ்தானில் சாலையில் கேட்பாரற்று கிடந்த வாக்குப்பதிவு எந்திரம்

360 0

ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலின்போது பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரம் சாலையில் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 200 தொகுதிகளில் ஒரு தொகுதி தவிர மீதமுள்ள 199 தொகுதிகளிலும் அமைதியாக வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலில் 72.7 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. 11-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வாக்குப்பதிவு முடிவடைந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு அந்தந்த வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.

இந்நிலையில், பரன் மாவட்டம் கிஷன்கஞ்ச் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஷகாபாத் பகுதியில் ஒரு மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் சாலையில் கேட்பாரற்றுக் கிடந்தது. இதுபற்றி தகவல் அறிந்த அதிகாரிகள் அங்கு சென்று அந்த வாக்கு எந்திரத்தை கைப்பற்றி, பாதுகாப்பாக அறையில் வைத்துள்ளனர்.

வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லும்போது அஜாக்கிரதையாக இந்த எந்திரத்தை தவறவிட்டிருக்கலாம் என தெரிகிறது. அலட்சியமாக செயல்பட்டதாக 2 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

Leave a comment