சீன உயர் அதிகாரி கைதில் அரசியல் இல்லை: கனடா பிரதமர் திட்டவட்டம்

423 0

மெங்வான்ஜவ் கைதில் அரசியல் நோக்கம் இல்லை என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உறுதிபட கூறி உள்ளார். 

சீனாவின் பன்னாட்டு நிறுவனமான ஹூவாய் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி மெங்வான்ஜவ், கனடாவில் வாங்கூவர் நகரத்தில் கடந்த 1-ந் தேதி கைது செய்யப்பட்டார். அமெரிக்கா கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்த நடவடிக்கையை கனடா எடுத்தது.

அவர் எதற்காக கைது செய்யப்பட்டுள்ளார் என்பது திட்டவட்டமாக தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் ஈரான் மற்றும் வட கொரியா மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடையை மீறியதாக கூறப்படுகிற விவகாரத்தில் அவர் கைது செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த நடவடிக்கை, அமெரிக்கா, சீனா இடையேயான மோதலை மேலும் தீவிரப்படுத்துவதாக அமைந்துள்ளது.

இந்த கைது நடவடிக்கை மனித உரிமை மீறல் என சீனா கொந்தளித்து இருப்பதுடன், மெங்வான்ஜவ்வை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று குரல் கொடுத்துள்ளது.

சீனாவில் வலைத்தள ஆர்வலர்கள் மெங்வான்ஜவ் கைதை கடுமையாக விமர்சித்து பதிவுகள் வெளியிட்டு வருகின்றனர். இது அரசியல் விளையாட்டு என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.

இந்தநிலையில், மெங்வான்ஜவ் கைதில் அரசியல் நோக்கம் இல்லை என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேற்று ஒரு அறிக்கையில் உறுதிபட கூறி உள்ளார்.

Leave a comment