தூத்துக்குடி மாணவி சோபியா மனு ஐகோர்ட்டில் ஒத்திவைப்பு

307 0

தமிழிசை சவுந்தரராஜனுக்கு எதிராக கோஷமிட்ட தூத்துக்குடி மாணவி சோபியா வழக்கின் விசாரணையை வருகிற 12-ந்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். 

தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கடந்த செப்டம்பர் மாதம் 3-ந்தேதி சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் சென்றார். அந்த விமானத்தில் பயணம் செய்த தூத்துக்குடி மாணவி சோபியா திடீர் கோஷமிட்டார். இதுதொடர்பாக தூத்துக்குடி புதுக்கோட்டை போலீசில் தமிழிசை சவுந்தரராஜன் புகார் அளித்தார். அதன்பேரில் சோபியா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். பின்னர் சோபியாவுக்கு தூத்துக்குடி கோர்ட்டு ஜாமீன் வழங்கியது.

இந்தநிலையில் தன் மீது தூத்துக்குடி புதுக்கோட்டை போலீசார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று கோரி சோபியா, மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளார். அதில், “விமானத்தில் கோஷமிட்டது தொடர்பாக போலீசார் என் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது அரசியலமைப்பு வழங்கியுள்ள பேச்சு சுதந்திரத்தை பறிப்பதாகும். எனவே தூத்துக்குடி புதுக்கோட்டை போலீசார் என் மீது பதிவு செய்துள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும். அதுவரை இந்த வழக்கை விசாரிக்கவும் தடை விதிக்க வேண்டும்” என்று கூறி இருந்தார்.

இந்த மனு நீதிபதி நிர்மல்குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், “தூத்துக்குடி கோர்ட்டில் மனுதாரர் மீதான வழக்கின் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது” என்று தெரிவித்தார்.

இதையடுத்து வழக்கின் விசாரணையை வருகிற 12-ந்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Leave a comment