திங்கள் முதல் வியாழன் வரை அரசு ஏசி பஸ்களில் கட்டணம் குறைப்பு

278 0

தமிழ்நாடு அரசு ஏசி பஸ்களில் திங்கள் முதல் வியாழன் வரை கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. 10 சதவீதம் கட்டணம் குறைப்பு காரணமாக அரசு ஏ.சி. பஸ்களில் சராசரியாக ரூ.40 முதல் ரூ.150 வரை குறைந்துள்ளது. 

தமிழக அரசின் விரைவு போக்குவரத்துக் கழகம் கடந்த ஜூலை மாதம் படுக்கை வசதி கொண்ட புதிய ஏ.சி. பஸ் சேவைகளை தொடங்கியது.

34 ஏ.சி. படுக்கை வசதி பஸ்கள், ஏ.சி. இல்லாத 2 படுக்கை வசதி பஸ்கள், 10 அல்ட்ரா கிளாசிக் பஸ்கள் (கழிவறை வசதி கொண்டது), 6 ஏ.சி. படுக்கை மற்றும் இருக்கை வசதி கொண்ட பஸ்கள் என 52 சொகுசு பஸ்களை தற்போது அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் இயக்கி வருகிறது.

நாகர்கோவில், தூத்துக்குடி, நெல்லை, மதுரை, திருச்சி, போடி, கீழக்கரை, கோவை, பெங்களூர், எர்ணாக்குளம், தஞ்சை, சேலம், திண்டுக்கல் உள்பட பல்வேறு நகரங்களுக்கு இந்த ஏ.சி. படுக்கை பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகளிடம் அதிருப்தி எழுந்தது.

தனியார் ஆம்னி பஸ்களின் போட்டியை சமாளிக்க கொண்டு வரப்பட்ட அந்த அரசு விரைவு பஸ்களில், ஆம்னி பஸ் கட்டணத்தை விட அதிக அளவில் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. சில வழித்தடங்களில் ஆம்னி பஸ்களை விட அரசு ஏ.சி. பஸ்களில் 10 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை கட்டணம் அதிகமாக இருந்தது.

அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் சார்பில் ஏ.சி. பஸ்கள் ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்பட்டதும் மகிழ்ச்சி அடைந்த நடுத்தர மக்கள், நாளடைவில் அதிக கட்டணம் காரணமாக மனமாற்றம் அடைந்தனர். இதன் காரணமாக அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் ஏ.சி. பஸ்களில் பயணம் செய்ய பயணிகள் ஆர்வம் காட்டவில்லை.

இதனால் அரசு ஏ.சி. பஸ்களில் பயணிகள் கூட்டம் குறைந்தது. குறிப்பாக திங்கட்கிழமை முதல் வியாழக்கிழமை வரை பயணிகள் வருகை மிக, மிக குறைந்து போனது. வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களில் மட்டுமே ஓரளவு பயணிகள் பயணம் செய்தனர்.

வார நாட்களில் பயணிகள் வருகை நாளுக்கு நாள் வீழ்ச்சி அடைந்ததால் தொலைத்தூர ஏ.சி. பஸ்களின் நிகர வருவாயிலும் இழப்பு ஏற்பட்டது. இதுபற்றி ஆய்வு செய்தபோது அதிக கட்டணம்தான் முக்கிய காரணம் என்று தெரிய வந்தது. இதையடுத்து ஏ.சி. படுக்கை வசதி பஸ்களின் கட்டணத்தை குறைக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி அரசு ஏ.சி. பஸ்களில் 10 சதவீதம் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. ஏ.சி. படுக்கை வசதி பஸ்களில் கிலோ மீட்டருக்கு சராசரியாக 20 பைசா குறைக்கப்பட்டுள்ளது. அல்ட்ரா கிளாசிக் பஸ்கள், ஏ.சி. இல்லாத படுக்கை வசதி இல்லாத பஸ்களில் கிலோ மீட்டருக்கு 10 பைசா குறைக்கப்பட்டுள்ளது.

10 சதவீதம் கட்டணம் குறைப்பு காரணமாக அரசு ஏ.சி. பஸ்களில் சராசரியாக ரூ.40 முதல் ரூ.150 வரை குறைந்துள்ளது. இந்த கட்டண குறைப்பு நேற்று (6-ந்தேதி) முதல் உடனடியாக அமலுக்கு வந்தது. இந்த கட்டண குறைப்பு திங்கட்கிழமை முதல் வியாழக்கிழமை வரை மட்டுமே அமலில் இருக்கும்.

வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள பழையக் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அது போல திருவிழா மற்றும் பண்டிகை நாட்களிலும் பழைய கட்டணமே வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குனர் வி.பாஸ்கரன் கூறியதாவது:-

பயணிகளின் கோரிக்கையை ஏற்று தொலைதூர அரசு ஏ.சி. படுக்கை வசதி பஸ்களில் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. படுக்கையும் இருக்கையும் கொண்ட பஸ்களில் படுக்கைக்கு மட்டுமே கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. இருக்கைக்கான கட்டணத்தில் எந்தவித மாற்றமும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

அரசு ஏ.சி. பஸ்களில் கட்டணம் குறைக்கப்பட்டு இருப்பதற்கு பயணிகள் மகிழ்ச்சியும் வரவேற்பும் தெரிவித்துள்ளனர். சென்னையில் இருந்து பெங்களூருக்கு அடிக்கடி செல்லும் ராஜசேகரன் என்பவர் கூறுகையில், ‘‘சென்னை-பெங்களூர் இடையே ரெயிலில் மூன்றாம் வகுப்பு ஏ.சி. கட்டணம் ரூ.620 ஆக உள்ளது. ஆனால் தமிழக அரசு ஏ.சி. பஸ்சில் கட்டணம் ரூ.775 ஆக நிர்ணயித்திருந்தது சற்று அதிகமாக இருந்தது.

தற்போது ஏ.சி. பஸ் கட்டணத்தை ரூ.75 குறைத்துள்ளனர். இனி அரசு பஸ்சில் ரூ.700 கட்டணத்தில் செல்லலாம். இந்த கட்டண குறைப்பு வரவேற்கத்தக்கது’’ என்றார்.

கட்டணம் அதிகம் என்று கூறி பயணிகள் வராததால் அடிக்கடி ஏ.சி. பஸ்களை ரத்து செய்ய வேண்டிய நிலை இருந்தது. கட்டண குறைப்பைத் தொடர்ந்து இனி அரசு ஏ.சி. பஸ்கள் முழுமையாக இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a comment