பாராளுமன்றத்தில் 113 பெரும்பான்மையைக் கூட நிரூபிக்க முடியாதவர்கள் 150 பெரும்பான்மை ஆதரவுடன் அரசியல் அமைப்பில் திருத்தங்களை மேற்கொள்வதாக குறிப்பிடுவது வேடிக்கையாகும் என பாராளுமன்ற உறுப்பினர் சரத்பொன்சேகா தெரிவித்தார்.
ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காக விகாரமாதேவிப்பூங்காவில் தொடரும் சத்தியாக்கிரக போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்த சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளமை அவரது அரசியல் சூழ்ச்சியினை வெளிப்படுத்துகின்றது.
18 ஆம் திருத்தத்தினை மீண்டும் நடைமுறைப்படுத்தி அதனூடாக தான் தொடர்ந்து ஆட்சியதிகாரத்தில் இருக்க ஒரு தரப்பினர் ஜனாதிபதியை பகடைக்காயாக பயன்படுத்துகின்றனர்.
மஹிந்த ராஜபக்ஷ தற்போது சாதாரண பாராளுமன்ற உறுப்பினராகவே திகழ்கின்றார். அவரிற்கு விஜயராம மாவத்தையிலிருந்து பாராளுமன்றத்திற்கு வருவதற்கு ஹெலிகொப்டர் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான செலவுகளை யார் ஈடுசெய்வது? இங்கு பொதுமக்களின் பணம் அநாவசியமான முறையில் செலவு செய்யப்படும் நிலை காணப்படுகின்றது என்றார்.