அணு ஆயுத கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தை மீறி அமெரிக்கா ஆயுதம் தயாரித்தால் நாங்களும் ஆயுதம் தயாரிப்போம் என்று ரஷிய அதிபர் புதின் மிரட்டல் விடுத்துள்ளார்.
2-ம் உலகப்போரில் ஜெர்மனிக்கு எதிராக அமெரிக்காவும், ரஷியாவும் ஒன்று சேர்ந்து போரில் ஈடுபட்டன.
ஆனால், போர் முடிவுக்கு பிறகு அமெரிக்கா-ரஷியா இடையே நீ பெரியவனா? நான் பெரியவனா? என்ற போட்டி ஏற்பட்டது.
இதனால் இரு நாடுகளும் ஆயுதங்களை குவித்தன. குறிப்பாக அணுகுண்டு தயாரிப்பிலும், அவற்றை ஏவும் ஏவுகணை தயாரிப்பிலும் தீவிரம் காட்டின.
எந்த நேரத்திலும் இருநாடுகளும் மோதிக் கொள்ளலாம் என்று சூழ்நிலை நிலவியது. இந்த நிலையில் ரஷிய அதிபராக இருந்த கோர்பசேவ் சற்று இறங்கி வந்தார்.
இதன் காரணமாக 1987-ம் ஆண்டு அமெரிக்கா- ரஷியா இடையே அணு ஆயுத பரவல் தடுப்பு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
இதன்படி குறுகிய மற்றும் நடுநிலை அணு ஆயுத ஏவுகணைகளை தயாரிப்பதை நிறுத்துவது, ஏற்கனவே தயாரித்த பல பல ஆயுதங்களை அழிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து இரு நாடுகளுமே பெரும்பாலான அணு ஆயுதங்களை அழித்தன. புதிய ஆயுதங்களும் தயாரிக்கப்படவில்லை.
ஆனால், இந்த ஒப்பந்தத்தை மீறி ரஷியா செயல்பட்டு வருவதாகவும், எனவே, ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற போவதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.
இந்த நிலையில் அமெரிக்க மந்திரி மைக் பாம்பியோ இன்னும் 60 நாட்களில் குறிப்பிட்ட ஏவுகணைகளை ரஷியா அழிக்காவிட்டால் நாங்கள் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவோம் என்று கூறினார்.
நேட்டோ நாடுகளும் ரஷியா ஒப்பந்தத்தை மீறி செயல்படுவதாக குற்றம் சாட்டி உள்ளது. நடுத்தர ஏவுகணைகளை தயாரிக்க அமைப்பு ஒன்றை ரஷியா உருவாக்கி உள்ளது. இதுவே ஒப்பந்தத்தை மீறிய செயல் என்று நேட்டோ கூறி இருக்கிறது.
அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் குற்றச்சாட்டுக்கு ரஷிய அதிபர் புதின் பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-
இந்த ஒப்பந்தத்தை நாங்கள் மீறியதற்கான எந்த ஆதாரமும் அமெரிக்காவிடம் இல்லை. ஆனாலும், நாங்கள் ஒப்பந்தத்தை மீறி விட்டதாக தவறான குற்றச்சாட்டை கூறுகிறார்கள்.
தற்போது நிலைமைகள் மாறி விட்டது. எங்கள் மீது குற்றம்சாட்டி ஒப்பந்தத்தை விட்டு வெளியேறி பல ஆயுதங்களை தயாரித்து வைத்து கொள்ளலாம் என அமெரிக்கா நினைக்கிறது.
அவர்கள் ஆயுதம் தயாரித்தால் நாங்களும் ஆயுதம் தயாரிப்போம். நாங்கள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருக்கும் நிலையில் பல நாடுகள் இதுபோன்ற தடை செய்யப்பட்ட ஆயுதங்களை தயாரித்து உள்ளன.
ஒப்பந்தத்தில் இருந்து எப்படியாவது வெளியேற வேண்டும் என்று அமெரிக்கா நினைக்கிறது. எனவே, தங்கள் தரப்பில் நியாயம் இருப்பது போல் காட்டிக்கொள்ள எங்கள் மீது குற்றம் சாட்டுகிறார்கள். இவ்வாறு புதின் கூறினார்.