இலங்கையில் தற்போது காணப்படும் அரசியல் நெருக்கடியால் மிக மோசமான பொருளாதார சமூக விளைவுகள் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுத்துள்ள இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவர் அலைனா டெப்பிலிட்ஸ் சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையும் பாதிக்கப்படலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக இலங்கையின் அரசியல் தலைவர்களை தற்போதைய நெருக்கடிக்கு உடனடியாக தீர்வு காணுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இலங்கையின் சகா மற்றும் நட்பு நாடு என்ற அடிப்படையில் அரசியல் நெருக்கடிக்கு உடனடியான வெளிப்படையான ஜனநாயக வழிமுறையிலான தீர்வை காணுமாறு நாங்கள் கேட்டுக்கொண்டுள்ளோம் என அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.
இந்த அரசியல் மோதலில் யார் வெற்றிபெறவேண்டும் என்பது குறித்து நாங்கள் அக்கறை கொண்டிருக்கவில்லை (We have no dog in this fight) அரசியல் மோதலில் யார் பக்கமும் நாங்கள் நிற்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசமைப்பு நடைமுறைகளை மதிக்கும், வெளிப்படையான, சட்டபூர்வமான அரசாங்கத்தை உருவாக்கும் முடிவையே நாங்கள் எதிர்பார்க்கின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கான புதிய தூதுவராக பணியாற்றிய பின்னர் பல அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ள டெப்பிலிட்ஸ் இலங்கையின் அரசியலமைப்பின் வரையறைக்குள், மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் இந்த பிரச்சினைக்கு தீர்வை காண்பதற்கு அனுமதிக்கப்படவேண்டும் என இந்த சந்திப்பில் வலியுறுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
நாங்கள் இலங்கையின் அரசியல் தலைமைத்துவத்தையும் ஜனாதிபதி சிறிசேனவையும் தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு பொறுப்புணர்வுடன் தீர்வை காணுமாறு கோரியுள்ளோம் இதன் மூலம் இலங்கையில் அரசமைப்பினால் ஆணைவழங்கப்பட்ட அரசாங்கம் ஆட்சி செய்கின்றது , ஜனநாயக ஸ்தாபனங்கள் மதிக்கப்படுகின்றன என்பது தெளிவாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் அரசியல் கௌவரத்தை மீள ஏற்படுத்தவேண்டும் அதற்கான வாய்ப்பு வழங்கப்படவேண்டும் என தெரிவித்துள்ள அமெரிக்க தூதுவர் இலங்கை முன்னோக்கி செல்வதற்கு இது மிகவும் முக்கியமானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நெருக்கடியான அரசியல் நிலவரம் காணப்பட்டால் அது இலங்கையின் கௌரவத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
இந்த நெருக்கடியால் பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்த கூடிய விளைவுகள் உருவாகியுள்ளன என தெரிவித்துள்ள தூதுவர் இலங்கையின் ஜனநாயக அரசியல் ஸ்தாபனங்களும் பாதிக்கப்பட்டுள்ளன எனவும் குறி;ப்பிட்டுள்ளார்.
அரசியல் ஸ்திரமின்மை முதலீட்டாளர்களிற்கு ஆபத்தான செய்தியை தெரிவிக்கின்றது இதன் காரணமாகவும் அரசியல் ஸ்திரதன்மையை மீள ஏற்படுத்துவது முக்கியம் என அவர் தெரிவி;த்துள்ளார்.
தற்போதைய நெருக்கடி முடிவிற்கு வந்த பின்னர் பல விடயங்களிற்கு எவ்வாறு தீர்வை காணப்போகின்றீர்கள் என்பது மிகச்சவாலான விடயமாக அமையப்போகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை காண்பதில் வெற்றியடைந்தாலும் இலங்கை தனது சர்வதேச சகாக்களிற்கும் முதலீட்டாளர்களிற்கும் மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு சிறிது காலம் பிடிக்கும் எனவும் அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் அரசியல் நிலைமை பாரதூர கரிசனையை அளித்துள்ளதன் காரணமாக இலங்கையுடனான எம்சிசி முயற்சியை முன்னெடுக்கும் திட்டத்தை இடைநிறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
சட்டத்தின் ஆட்சியை மதிக்கவேண்டும் மற்றும் நல்லாட்சி அவசியம் என்ற அடிப்படையில் நாங்கள் இதனை இடைநிறுத்தியுள்ளோம், இது குறி;த்த பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிப்பதற்கு முன்னர் தற்போதைய நெருக்கடிக்கு எவ்வாறான தீர்வு காணப்படுகின்றது என்பதை பார்ப்பதற்காக காத்திருக்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்
இலங்கையின் தற்போதைய நெருக்கடி சிறிய காலமே நீடிக்கும் தற்போதைய நிலையை மாற்றியமைக்கலாம் என நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம் எனவும் அவர் தெரிவி;த்துள்ளார்.
சட்டபூர்வமான வெளிப்படையான ஜனநாயக ரீதியிலான நடைமுறை மூலம் உருவாகக்கூடிய எந்த அரசாங்கத்துடனும் இணைந்து செயற்படுவதற்கு அமெரிக்கா தயாராகவுள்ளது என தூதுவர்வர் குறிப்பிட்டுள்ளார்
சட்டபூர்வமான அரசாங்கத்துடனான நட்பே எங்கள் கரிசனைக்குரிய விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்
எங்கள் எதிர்பார்ப்புகள் குறித்து வெளிப்படையாக இருப்பதும் எங்கள் சகாவும் நட்பு நாடுமான இலங்கை குறித்த எங்கள் அபிலாசைகளை வெளிப்படுத்தவதும் இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுவதாகாது என கருதுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்