நாட்டுத் தலைவரின் அரசியலமைப்பு தொடர்பான அறிவு நன்கு புலப்படுகின்றது என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நீதித்துறையினை சுயாதீனப்படுத்தியமையையிட்டு நான் பெருமையடைகின்றேன் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.இதேவேளை, எவ்விடயத்தில் என்ன பேச வேண்டும் என்பது அறியாத ஒரு தடுமாற்ற நிலையே இன்று நாட்டு தலைவருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், நான் இந்நாட்டிற்கு பொறுத்தமற்ற அரசியல்வாதி என்று குறிப்பிடுகின்றனர்.
யார் பொருத்தமான அரசியல் நாகரீகமுடையவர் என்பதை நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டும். ஜனநாயகத்தை பாதுகாக்க அனைவரும் ஒன்றினைய வேண்டும் எனவும் ரணில் விக்கிரமசிங்க அறைகூவல் விடுத்தார்.
ஜனநாயகத்திற்கான தொழிற்துறையினர் ஏற்பாடு செய்த சந்திப்பு நேற்று புதன் கிழமை காலி முகத்திடல் ஹோட்டலில் இடம் பெற்றது .
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாட்டை நிர்வகிப்பது நிறைவேற்று அதிகாரம் அல்ல பிரதமர் தலைமையிலான அமைச்சரவை என்பதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விளங்கிக்கொள்ள வேண்டும்.
தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகள் அரசியல் ரீதியிலான ஒரு அனுபவம் . எதிர்காலத்தில் இந்நிலைமை தொடரக் கூடாது என்றால் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை இரத்து செய்ய வேண்டும்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின முறையற்ற செயற்பாட்டின் காரணமாக நாடு இன்று பாரிய பொருளாதார நெருக்கடியினை எதிர் கொண்டுள்ளது.
மக்கள் மத்தியில் என்னுடன் இணைந்து அரசியல் பயணத்தை மேற்கொள்ள முடியாது என்று குறிப்பிடுகின்றார். இவரது கருத்துக்கள் மக்கள் மத்தியில் இன்று மாறுபட்ட கருத்துக்களையே ஏற்படுத்தியுள்ளது.
ஒரு நாட்டின் ஜனாதிபதி குறிப்பிடும் ஒரு விடயம் எவரும் விமர்சிக்காத அளவிற்கு காணப்பட வேண்டும்.
கடந்த மூன்று வருட காலமாக நாட்டின் பொருளாதர முகாமைத்துவத்தினை ஐக்கிய தேசிய கட்சியினரே முன்னெடுத்து சென்றனர்.
அமைச்சரவையே ஒரு நாட்டின் அனைத்து நிர்வாகத்தினையும் முன்னெடுக்கும் நிறைவேற்று அதிகாரம் அல்ல என்பதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புரிந்துகொள்ள வேண்டும்.
2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தினை ஏற்படுத்திய காரணத்தினை அவர் நன்கு அறிவார். அரசியல் செயற்பாடுகளின் காரணமாக எவரும் துறைசார் அதிகார துஷ்பிரயோகம் செய்ய கூடாது என்பதற்காகவே முக்கியமாக துறைகள் சுயாதீனப்படுத்தப்பட்டன.அவையே இன்று எதிர்த் தரப்பினருக்கு தடையாகவும், ஜனநாயகத்திற்கு பாதுகாப்பாகவும் காணப்படுகின்றது. நீதித்துறையினை சுயாதீனப்படுத்தியமையினையிட்டு நான் பெறுமிதம் கொள்கின்றேன்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்ற உறுப்பினரை பெரும்பான்மை இல்லாமல் பிரதமராக நியமித்தமை தொடக்கம் முன்னெடுத்த அனைத்து விடயங்களும் அரசியலமைப்பிற்கு முற்றிலும் முரணானது என்பதை தற்போது உணரும் நிலை ஏற்பட்டுள்ளது. பாரளுமன்றத்தின் 225 உறுப்பினர்களும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரை பிரதமராக தெரிவு செய்யும்படி குறிப்பிட்டாலும் தான் என்னை பிரதமராக்கமாட்டேன் என்று அவர் குறிப்பிடுவது அவரது அரசியலமைப்பு தொடர்பிலான அறிவினை நன்கு புலப்படுத்துகின்றது.
பாராளுமன்றத்திற்கும் நிறைவேற்று அதிகாரத்திற்கும் எவ்வித தொடர்புகளும் கிடையாது. பாராளுமன்றத்தின் செயற்பாடுகளுக்கு ஜனாதிபதி தலையிடும் பொழுது அங்கு மக்களாட்சி மழுங்கடிக்கப்படும் என்ற காரணத்தினாலே 19வது அரசியலமைப்பின் ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு பாராளுமன்றத்தின் அதிகாரங்கள் வலுப்படுத்தப்பட்டது.
எவ்வாறு இருப்பினும் அவர் ஏற்படுத்திய அரசியல் நெருக்கடிகளுக்கு அவரே விரைவில் சட்டத்தின் ஊடாக தீர்வு வழங்குவார்.
தற்போது அரசியலமைப்பிற்கு முரணான தெரிவு செய்யப்பட்ட பிரதமர் மற்றும் அவர் தலைமையிலான அமைச்சரவைக்கு பாரிய இழுக்கே ஏற்பட்டுள்ளது. நீதிமன்றம் வெகுவிரைவில் அரசியலமைப்பினை நெருக்கடிக்கு உள்ளாக்கியவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கும். என்பது தற்போது உறுதியாக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் விசேட மாநாடு இடம் பெற்றது.
நாட்டில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பல பெருமைவாய்ந்த தலைவர்களை கொண்டது. அக்கட்சியின் காரணமாகவே நாட்டில் பல முக்கியமான நிகழ்வுகள் இடம் பெற்றது. அத்தகைய பெருமைவாய்ந்த கட்சியின் மாநாட்டில் தற்போதைய தலைவர் அவ்விடயம் தொடர்பில பேசாமல் என்னையே விமர்சித்தார்.
நான் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உறுப்புரிமையினை ஒருபோதும் பெறவில்லை. என்பதை அவர் தெரிந்துகொள்ள வேண்டும். எவ்விடயத்தில் என்ன பேச வேண்டும் என்பது அறியாத ஒரு தடுமாற்ற நிலையே இன்று நாட்டு தலைவருக்கு ஏற்பட்டுள்ளது.
தற்போதைய அரசியல் நெருக்கடி பொருளாதாரத்தில் மாத்திரம் தாக்கம் செலுத்தவில்லை. அரசியலமைப்பிலும் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. தாங்கள் செய்வது தவறு என்று தெரிந்தும். நீதித்துறையை பலவீனப்படுத்த முயற்சிப்பது இவர்கள தேசத்தின் மீது கொண்டுள்ள பற்றினை வெளிப்படுத்துகின்றது. ஆனால் நான் இந்நாட்டிந்கு பொறுத்தமற்ற அரசியல்வாதி என்று குறிப்பிடுகின்றனர்.
யார் பொருத்தமான அரசியல் நாகரீகமுடையவர் என்பதை நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டும். ஜனநாயகத்தை பாதுகாக்க அனைவரும் ஒன்றினைய வேண்டும் என்றார்.