“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மக்கள் சந்திப்பில் ஊடகங்களில் ரணில் விக்ரமசிங்கவை பலவாறு குறை கூறினாலும் எங்களுடைய தலைவர் அறிவுப்பூர்வமாகவும், பொறுமையாகவும் செயற்படுகிறார். ஏதாவது ஒரு இடத்திலாவது ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியை குறை கூறினார் என ஒப்புவிக்குமாறு சவால் விடுக்கிறோம்” என பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டாரா தெரிவித்தார்.
அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற விஷேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே நளின் பண்டார மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட நளின் பண்டார,
“அமைச்சர்கள் 225 பேர் கூறினாலும் ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரதமர் பதவியை வழங்க மாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறுகிறார். ரணில் விக்ரமசிங்க மீது ஜனாதிபதிக்கு இருக்கும் கோவம் வெறுப்பு எங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
மைத்திரிபால சிறிசேனவிற்கு ஜனாதிபதி இடத்திற்கு வருவதற்கு வழி அமைத்துக் கொடுத்த ரணில் விக்ரமசிங்க இது வரையில் எச் சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதிக்கு குறை கூறியதில்லை.
பின் வரிசை அமைச்சர்கள் என்ற ரீதியில் நாங்கள் ஜனாதிபதியை விமர்சிக்கும் போதும் அவ்வாறு செய்ய வேண்டாம் என ரணில் விக்ரமசிங்க எங்களை அறிவுறுத்தியுள்ளார்.
சமீபத்தில் இந்தியாவின் புலனாய்வு துறையின் ‘ரோ’ அமைப்பானது தன்னை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளதாக எங்களது நட்பு நாடான இந்தியாவுடன் பிரச்சினையை ஏற்படுத்திக் கொண்ட சந்தர்ப்பத்தில் இந்தியாவிற்கு விஜயம் செய்த ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அப் பிரச்சினையிலிருந்து மீட்டெடுத்தார்.
ஆனால் அதையெல்லாம் மறந்து ஜனாதிபதி நாடு பூராகவும் ரணில் விக்ரமசிங்கவை பலவாறு குறை கூறி திறிகிறார். இருப்பினும் எங்களுடைய தலைவர் அறிவுப்பூர்வமாகவும் பொறுமையாகவும் செயற்படுகிறார். ஏதாவது ஒரு இடத்திலாவது ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியை குறை கூறினார் என ஒப்புவிக்குமாறு சவால் விடுக்கிறோம்.” என தெரிவித்தார்.