நீதிமன்ற தீர்ப்புகளுக்கு மதிப்பளித்து நாட்டில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய ஐக்கிய தேசிய கட்சி பிரதி தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச, மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்புக்கு சவால் விடுக்கின்றமையானது நாட்டில் மஹிந்த தரப்பு காட்டுச் சட்டத்தை முன்னெடுப்பதாகவே அமையும் எனவும் குறிப்பிட்டார்.
இச்சூழ் நிலையில் நாட்டு மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்காகவேனும், மீண்டும் ஒரு பிரதமரை நியமிக்க முயற்சிக்கும் நாடகத்தை கைவிட்டு, நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக்கொண்டு ஒக்டோபர் 26 ஆம் திகதிக்கு முன்னரான அரசாங்கத்தினை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
பாராளுமன்ற கலைப்புக்கு எதிராக உயர் நீதிமன்றில் இடம்பெற்று வழக்கின் விசாரணைகளுக்காக இன்று உயர் நீதிமன்றுக்கு வருகை தந்திருந்த வேளையில், நீதிமன்ற வளாகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.