நாட்டில் ஏற்பட்டுள்ள ஸ்தீரமற்ற அரசியல் நிலைமைக்கு எதிர்வரும் 07 ஆம் திகதி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு நல்ல வழியை காட்டும் என்ற நம்பிக்கையுள்ளது.
அதேவேளை நீதிமன்ற தீர்ப்புக்கு அப்பால் சிறந்த அரசாங்கம் ஒன்றை உருவாக்க தேர்தல் ஒன்றின் ஊடாக மக்கள் நல்ல தீர்ப்பினை வழங்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், இராஜாங்க அமைச்சருமான சீ.பி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் வளங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதிலிருந்து தடுத்து நாட்டின் எதிர்காலத்தை கட்டியெழுப்ப ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பிரதமர் பொறுப்பை ஏற்றுள்ள மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் இந்த நாட்டை முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்க இடமளிக்கமாட்டார் எனவும் தெரிவித்தார்.
கொத்மலை தவலந்தென்ன பகுதியில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்தாவது,
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்து ஆட்சியினை கொண்டு செலுத்திய கடந்த அரசாங்கத்தினால் பல்வேறு அபிவிருத்திகள் செய்யப்பட்டன.
நமது நாட்டு மக்களுக்கே சொந்தமான துறைமுகம், விமான நிலையம், அதிவேக வீதிகள், எண்ணெய் தாங்கிகள் என அபிவிருத்தி செய்யப்பட்ட வளங்களை அதில் குறைபாடு ,இதில் குறைப்பாடு என குறைக்கூறிக்கொண்டு வெளிநாடுகளுக்கு தாரைவார்த்து கொடுக்க தனவாத அரசியலை கொண்டு செலுத்தும் ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து இந்த வளங்களையும் நாட்டு மக்களின் எதிர்காலத்தையும் பாதுகாக்கவே ஜானாதிபதி மைத்ரிபால சிறிசேன மஹிந்தவுக்கு பிரதமர் பதவியை சட்டபூர்வமாக வழக்கியதாக சுட்டிக்காட்டினார்.
இதனை எதிர்த்தும் பாராளுமன்றத்தை ஜனாதிபதி கலைத்தமையை எதிர்த்தும் உயர் நீதிமன்றம் சென்றனர். இதற்கு காரணம் முன்னாள் பிரதமர் ரணிலுக்கு நாடுபற்றிய கவலையில்லை மாறாக பதவியே தேவை என்பதுதான். அதேவேளையில் இதற்கு துணையாக பலரும் நீதிமன்றம் சென்றனர்.
ஆனால் உயர் நீதிமன்றம் பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால உத்தரவை விதித்துள்ளது.எதிர்வரும் 7ஆம் திகதி வரை தற்காலிக தடை விதித்துள்ள நீதிமன்றம் அதன் தீர்ப்பை நாட்டின் எதிர்காலத்தை கருதி நல்ல தீர்பை வழங்கும் என்ற நம்பிக்கையுள்ளது.