இரண்டு பிரதான கட்சிகளும் எதனையுமே தமிழ் மக்களுக்காக செய்யவில்லை-அனந்தி சசிதரன்

356 0

தென்னிலங்கையில் இராமன் ஆண்டாலென்ன இராவணண் ஆண்டாலென்ற என்ற எண்ணத்தில் தமிழ் மக்கள் இருக்கின்ற போது ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்படுவதனை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள கொள்ளவில்லை என ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலாளரும் வடக்கு மாகாண முன்னாள் அமைச்சருமான அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சிக்கு தொடர்ச்சியாக கூட்டமைப்பு ஆதரவை வழங்கி வருவதால் தமிழ் மக்களுக்கு எதிர்காலத்தில் பல்வேறு பாதிப்புக்கள் ஏற்படலாம். ஆகவே இதனால் ஏற்படும் விளைவுகளுக்கும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களே பொறுப்பு கூற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சுழிபுரத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (01) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தெற்கு அரசியலில் அதிகாரத்திற்கு வருவதற்கான பலப்பரீட்சை நடக்கின்றது. இதில் யார் அதிகாரத்திற்கு வந்தாலும் தமிழ் மக்களுக்கு ஏதுமே நடக்கப் போவதில்லை. ஏனெனில் கடந்த காலங்களில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த இரண்டு பிரதான கட்சிகளும் எதனையுமே தமிழ் மக்களுக்காக செய்யவில்லை.

இவ்வாறான நிலையில் தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் தொடர்பில் பேசாமல் நிபந்தனையற்ற ஆதரவை ஐக்கிய தேசியக் கட்சிக்கு கூட்டமைப்பு வழங்கி வருகின்றது. இது தொடர்பில் தமிழ் மக்களுடனேனும் பேசாமல் ஒரிருவர் முடிவுகளை எடுத்து செயல்படுகின்றதை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

அத்தோடு இன்றைக்கு ஐனநாயகத்தை பாதுகாக்க என்று ஓர்மத்தோடு செயற்பட்டு வருகின்ற சம்மந்தனுக்கு 2009 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் கொல்லப்பட்ட போதும் அதன் பின்னர் தமிழ் மக்கள் இத்தனை துன்ப துயரங்களையும் அனுபவிக்கின்ற போதும் இதே ஓர்மத்துடன் செயற்பட்டாரா என்று பார்க்க வேண்டும்.

தமிழ் மக்களுக்காக செயற்படாத கூட்டமைப்பினர் ஐக்கிய தேசியக் கட்சிக்காகவே தற்போது செயற்பட்டு வருகின்றனர். இதனை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இவர்களுடைய இத்தகைய செயற்பாடுகளினால் தமிழ் மக்களுக்கு ஏற்படும் விளைவுகளுக்கு அவர்களே பொறுப்பு கூற வேண்டும். அத்தோடு இத்தகைய செயற்பாடுகளுக்கான விளைவுகளையும் தமிழ் மக்களிடமிருந்து அவர்கள் எதிர்நோக்கும் வேண்டி வருமென்றும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை மாகாண கூட்டுறவு தொடர்பில் முன்வைத்த குற்றச் சாட்டுக்களை முற்றாக மறுக்கின்றேன். அத்தகைய குற்றச்சாட்டுக்கள் என்பது திட்டமிட்ட வகையில் என்மீதான காழ்ப்புணர்ச்சி காரணமாகவே அரசியல் பழிவாங்களுக்காகவே சீ.வீ.கே.சிவஞானம் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றார்.

அவ்வாறாயின் சிவஞானம் யாழ் மாநகர ஆணையாளராக இருந்த காலத்திலிருந்து மாநகர சபையில் உடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடுகள், ஊழல்கள் தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும். மாகாண சபையின் பல செயற்பாடுகளுக்கும் சிவஞானம் தடையாகவும் இருந்த உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

Leave a comment