நாட்டில் பெரும்பான்மை மக்களின் அபிப்பிராயத்தினை வென்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கீர்த்தியை மழுங்கடிக்கும் செயற்பாடாகவே தற்போதைய அரசியல் நெருக்கடி காணப்படுவதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம, இவை அனைத்திற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே பொறுப்பு கூற வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
ஆட்சி மாற்றத்தினை தொடர்ந்து ஐக்கிய தேசிய கட்சியினர் தங்களின் பெரும்பான்மை பலத்தினை நான்கு முறை பாராளுமன்றத்தில் நிரூபித்து விட்டனர். பெரும்பான்மை பலம் இல்லாமல் ஆட்சியினை முன்னெடுத்து செல்ல முடியாது என்று நான் பலமுறை மஹிந்த ராஜபக்ஷ உட்பட அவரது தற்போதைய நெருங்கிய சகாக்களுக்கு எடுத்துரைத்தேன் .
ஆனால் நிழல் அமைச்சரவை அமைச்சர்கள் தங்களுக்கு கிடைக்கப் பெற்ற அமைச்சுககளை தக்கவைத்துக் கொள்ள முயற்சிக்கின்றனரே தவிர அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வை காண முன்வருவதில்லை அதற்காக அவர்கள் பல மாறுப்பட்ட தர்க்கங்களை முன்வைக்கின்றனர். அதற்கும் சட்ட விளக்கம் அளிக்க ஒரு தரப்பினர் எந்நேரமும் ஆயத்தமாக உள்ளனர்.
தேசிய அரசாங்கம் என்ற கூட்டரசாங்கத்தில் இடம் பெற்ற பிரச்சினைகளை அவர்களே தீர்த்துக் கொண்டிருக்க வேண்டும். இவ்விடயத்தில் எதிர் தரப்பினராக செயற்பட்ட எம்மை இணைத்து விட்டமை பாரிய தவறாகும் எனவும் குறிப்பிட்டார்.