புயல் பாதித்த மக்களின் வாழ்வாதார பிரச்சினை!

4929 0

மத்திய ஆய்வுக்குழுவினர் தரும் அறிக்கையே புயல் பாதித்த மக்களின் கடைசி நம்பிக்கையாக இருக்கிறது என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
இயற்கை பேரிடராம் கஜா புயல் கோரதாண்டவம் ஆடி முடித்த பகுதிகளில் இரண்டு வாரம் கழித்தும் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை. கிராமங்கள் பலவற்றுக்கு மின்வசதி கிடைக்காததால் இருளிலேயே மூழ்கியுள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசியல் கட்சியினர், பொதுநல அமைப்பினர், தன்னார்வலர்கள் என பல தரப்பினரும் உதவி வரும் நிலையில், நீங்களும் (தொண்டர்கள்) தொடர்ந்து உதவி, எப்போதும் உதவும் கரங்களாகவும் காக்கும் கரங்களாகவும் திகழ்வது கண்டு, உங்களில் ஒருவனான நான் நிம்மதியும் பெருமிதமும் கொள்கிறேன்.
தி.மு.க. சார்பில் முதல்-அமைச்சரின் நிவாரண நிதிக்கு 1 கோடி ரூபாய் உடனடியாக வழங்கப்பட்டது. தி.மு.க. சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் 1 மாத ஊதியமும் முதல்-அமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டுள்ளது. பிற மாவட்டங்களிலிருந்து திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் முதற்கட்டமாக சேகரிக்கப்பட்ட 4 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் புயலால் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
எந்தவித ஆய்வையும் முழுமையாக மேற்கொள்ளாமல், அவசரக்கோலத்தில் அரைகுறை விவரங்களோடு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று பிரதமரைச் சந்தித்து நிவாரண நிதி கேட்டதுகூட, பாதிக்கப்பட்ட மக்களின் மேல் உள்ள அக்கறையினால் அல்ல என்பதும், அது தனியார் நிறுவனம் ஒன்று தகுதி பார்க்காமல் வழங்கிய விருதினைப் பெறுவதற்காகத்தான் என்பதும் வெட்டவெளிச்சமாகி முதல்-அமைச்சரின் முகத்திரையைக் கிழித்து போட்டிருக்கிறது. இதன்பிறகு முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் மேற்கொள்ளும் சம்பிரதாயப்பயணங்களை புயல் பாதித்த பகுதி மக்கள் நம்புவதற்கு தயாராக இல்லை.
அவர்கள் எதிர்பார்ப்பது, பெயரளவுக்கான அறிவிப்புகளை அல்ல; வாழ்வாதாரத்தை எதிர்கொள்வதற்கான தொடர்ச்சியான முழுமையான நிவாரண உதவிகளைத்தான். இழந்த குடிசைகளுக்கு இழப்பீடு தரப்படுவதுடன், கான்கிரீட் வீடு திட்டம் வெற்று அறிவிப்பாக முடிந்துவிடக்கூடாது என்ற உறுதிமொழியையும் தான். தென்னை மரத்துக்கு இழப்பீடாக ரூ.1,100 என்பது விவசாயிகளின் கண்ணீரைத் துடைக்காது.
ஆட்சியாளர்களின் ஊதாரித்தனமான செலவினங்கள், முதலீடுகளை ஈர்க்கும் திறனற்ற நிலை, வெளிமாநிலங்களை நோக்கிச் செல்லும் தொழிற்சாலைகள் என வருவாய் பாதிப்பு அதிகமாகி, பெருங்கடனில் தவிக்கிறது தமிழ்நாடு. நிர்வாக சீர்கேட்டால் ஏற்பட்ட இந்த செயற்கை பேரிடரைத் தொடர்ந்து இயற்கை பேரிடரும் தாக்கியுள்ள நிலையில், மத்திய அரசு வழங்கும் நிதிதான் தமிழ்நாட்டைக் காப்பாற்றும்.
மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெறாத காரணத்தாலும், அரசாங்கத்தின் அக்கறையற்ற போக்கினாலும் உயிரிழப்புகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. மரணப் படுக்கையில் தவிக்கின்றன புயல் பாதித்த பகுதிகள். மறுவாழ்வு தரும் வகையில் அரசாங்கத்தின் நிவாரண சிகிச்சை அவசியம்.
சேதங்களை முழுமையாக மதிப்பிடாமல் உரிய ஆலோசனைகள் நடத்தாமல் பிரதமரிடம் முதல்-அமைச்சர் கேட்ட 15 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரண நிதி என்பது குறைவான தொகை தான். முழுமையான மதிப்பீடு எதுவும் செய்யாமல் அவசரக் கோலத்தில் கொடுக்கப்பட்ட கோரிக்கை மனுதான். ஆனால், அந்தத் தொகையாவது உடனடியாகக் கிடைக்கவும், கஜா புயலின் முழுமையான பாதிப்புகளை மதிப்பிட்டு, மக்களின் வாழ்வாதாரத்தை மீட்கவும் மத்திய ஆய்வுக் குழுவினர் தரும் அறிக்கைதான் கடைசி நம்பிக்கையாக உள்ளது.
காலில் விழுந்து கதறிய மக்கள் வடித்த கண்ணீரின் வலியையும் வலிமையையும் உணர்ந்து ஆய்வுக் குழுவினர் தங்கள் அறிக்கையை சமர்ப்பித்து, விரைவாக நிவாரணம் கிடைத்திட உதவிட வேண்டும். மத்திய-மாநில அரசுகளிடமிருந்து நியாயமான நிவாரணம் கிடைத்திடவும் வாழ்வுரிமையை மீட்டிடவும் தி.மு.க.வின் குரல் தொடர்ந்து ஓங்கி ஒலித்துக் கொண்டே இருக்கும். தி.மு.க. தொண்டர்களின் கரங்கள், துன்பத்தில் உழல்வோர்க்குத் தொடர்ந்து உதவிகளைச் செய்யும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a comment