அர்ஜென்டினாவில் ஜி-20 உச்சி மாநாடு தொடங்கியது. இதன் இடையே சீன அதிபர் ஜின்பிங்குடனும், சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுடனும் பிரதமர் மோடி பேச்சு வார்த்தை நடத்தினார்.
‘ஜி-20’ என்று அழைக்கப்படுகிற உலகின் மிகப்பெரிய பொருளாதார அமைப்பின் உச்சி மாநாடு, அர்ஜென்டினா நாட்டின் தலைநகரமான பியுனோஸ் அயர்ஸ் நகரில் நேற்று (30-ந் தேதி) தொடங்கியது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ரஷிய அதிபர் புதின், சீன அதிபர் ஜின்பிங், சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்ட 20 நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த மாநாட்டின் இடையே சீன அதிபர் ஜின்பிங்கை பிரதமர் மோடி சந்தித்து இரு தரப்பு பேச்சு வார்த்தை நடத்தினார். இரு தரப்பு உறவுகளை பலப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
2018-ம் ஆண்டு இந்திய சீன உறவுக்கு நல்லதொரு ஆண்டு. அடுத்த ஆண்டை இன்னும் சிறப்பானதாக்குவோம் என பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
ஜின்பிங்கிடம் பிரதமர் மோடி, “அடுத்த ஆண்டு நடக்க உள்ள உச்சி மாநாட்டில் உங்களை சந்திக்க ஆவலாக உள்ளேன். இந்த சந்திப்புக்கு நீங்கள் நேரம் ஒதுக்கித் தந்ததற்காக இதயம் கனிந்த நன்றி” என குறிப்பிட்டார்.
முன்னதாக பிரதமர் மோடியும், சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பு அந்த நகரத்தில் உள்ள இளவரசர் இல்லத்தில் நடந்தது.
பாதுகாப்பு, பொருளாதாரம், முதலீடு, விவசாயம், எரிசக்தி, கலாசாரம், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளும், ஒத்துழைப்பதற்கான வாய்ப்புகள் குறித்து இரு தலைவர்களும் விரிவாக விவாதித்தனர். உள்கட்டமைப்பு துறையிலும், விவசாய துறையிலும் முதலீடு செய்வதற்கான வாய்ப்பு பற்றியும் ஆலோசனை நடத்தினர். இந்தியாவில் பெருகி வரும் எண்ணெய், பெட்ரோலிய பொருட்கள் தேவையை சந்திப்பதற்கு ஏற்ற வகையில், அவற்றை வினியோகம் செய்வதற்கு சவுதி அரேபியா முன் வந்துள்ளது. இதை இளவரசர் முகமது பின் சல்மான் தெரிவித்தார்.
இந்தியாவில் உள்ள சுத்திகரிப்பு ஆலைகளில் சவுதி அரேபிய அரசுக்கு சொந்தமான சவுதி அரம்கோ எண்ணெய் நிறுவனம் முதலீடு செய்வது தொடர்பாகவும் இரு தலைவர்களும் விவாதித்தனர். இந்தியாவில் இருந்து சவுதி அரேபியாவுக்கு விவசாய உற்பத்தி பொருட்கள் ஏற்றுமதி செய்வது குறித்தும் இரு தலைவர்களும் பேசினர்.
இந்தியாவில் எரிசக்தி, உள்கட்டமைப்பு, ராணுவம் ஆகிய துறைகளில் சவுதி அரேபியாவின் முதலீடுகளை அதிகரிப்பதற்கு தலைவர்கள் மட்டத்திலான வழிமுறையை உருவாக்கவும் இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.
சவுதி அரேபியாவுக்கு இந்தியா முக்கியமான கூட்டாளி என்று பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் குறிப்பிட்டார். இந்தியாவின் தேசிய உள்கட்டமைப்பு நிதியத்தில் தொடக்க முதலீடு செய்வது தொடர்பாக சவுதி அரேபியா இறுதி செய்யும் என்றும் அவர் கூறினார்.
சூரிய மின்சக்தி கூட்டணியில் இணையுமாறு சவுதி அரேபியாவுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.
இந்த சந்திப்பு குறித்து பிரதமர் மோடி டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர், “சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுடனான பேச்சுவார்த்தை நிறைவானதாக அமைந்தது. இந்திய, சவுதி அரேபிய உறவின் பல்வேறு அம்சங்கள் குறித்தும், பொருளாதாரம், கலாசாரம், எரிசக்தி துறை உறவினை மேலும் மேம்படுத்துவது பற்றியும் நாங்கள் விவாதித்தோம்” என குறிப்பிட்டுள்ளார்.
சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுடனான சந்திப்பை தொடர்ந்து, ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ்சையும் பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
உலகளாவிய பருவநிலை மாற்ற பிரச்சினையில் இந்தியாவின் பங்களிப்பு குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.
இந்த சந்திப்பு குறித்து இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே கூறுகையில், “பருவநிலை மாற்றம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் இந்தியா முக்கிய பங்களிப்பு செய்துள்ளது என்று ஐ.நா. பொதுச்செயலாளர் கூறினார். பருவநிலை மாற்ற பிரச்சினையில் பிரதமர் மோடி ஆக்கப்பூர்வமான பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்” என்றார்.
முன்னதாக அமைதிக்கான யோகா என்னும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசும்போது, “15 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு அப்பால் இருந்து 24 மணி நேரத்துக்கும் அதிகமாக பயணம் செய்து இங்கு வந்துள்ளேன். உங்கள் அன்பினாலும், ஊக்கத்தினாலும்தான் நான் வந்துள்ளேன். நான் இந்தியாவுக்கு வெளியே இருக்கிறேன் என்ற உணர்வு எனக்கு இல்லை” என குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசும்போது, “உலகத்துக்கு இந்தியாவின் பரிசு யோகா. இது உடல் ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும் இணைக்கிறது. இந்தியாவுக்கும், அர்ஜென்டினாவுக்கும் இடையேயான நீண்ட தூரத்தையும் யோகாதான் இணைக்கிறது” என குறிப்பிட்டார்.
பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளை சேர்ந்த ‘பிரிக்ஸ்’ அமைப்பின் தலைவர்கள் கூட்டத்திலும் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும்போது, “ஐ.நா. சபை, உலக வங்கி போன்ற உலகளாவிய அமைப்புகளில் சட்டத்தின் ஆட்சியை உருவாக்குவதற்கான வலுவான களப்பணியை பிரிக்ஸ் நாடுகள் செய்ய வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.