பொதுச் சொத்துக்கள் சட்டத்தை மீறி, எழுக தமிழ் பேரணியை நடாத்திய வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டுமென பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பில் நேற்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.மேலும் அவர் தெரிவிக்கையில்,
“தேசியப் பிரச்சினைக்கு சமஸ்டித் தீர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடத்திய எழுக தமிழ் பேரணிக்கு, வட மாகாண முதலமைச்சர் தனது கடிதத் தலைப்பு மற்றும் மாகாணசபையின் வாகனங்கள் மற்றும் பணியாளர்களை தவறாகப் பயன்படுத்தியுள்ளார்.
தமிழர் தாயகப் பகுதிகளில் இராணுவத்தை நீக்குமாறும், சிங்களக் குடியேற்றங்களை நிறுத்துமாறும் போராட்டம் நடத்தியவர்கள் கோரியுள்ளனர்.அரசாங்கத்தின் பின்னணி ஆதரவுடன் நாட்டில் முதல் முறையாக தமிழ் பிரிவினைவாத ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டிருக்கிறது.
நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினால், முதலமைச்சர் விக்னேஸ்வரன் கைது செய்யப்பட்டு, பிணையில் வெளிவர முடியாத விளக்கமறியலில் வைக்கப்படுவதைக் காண நாம் காத்திருக்கிறோம்.
சிறிலங்காவின் எந்தப் பகுதியிலும் குடியேறும் உரிமை அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசரான விக்னேஸ்வரனுக்கு இது மறந்து போய் விட்டது துரதிஷ்டம்.
1981ஆம் ஆண்டு கொழும்பின் சனத்தொகையில், 51 வீதமாக இருந்த சிங்களவர்கள் இப்போது, 28 வீதமாக குறைந்து விட்டனர். போரினால் வடக்கில் இருந்து வெளியேறிய முஸ்லிம்களும் தமிழர்களும், கொழும்பில் குடியேறி விட்டனர்.
எவருமே, சிங்கள கடும்போக்குவாதிகள் என்று அடையாளப்படுத்தப்படுவோரும் கூட, கொழும்பில் இருந்து தமிழர்களையோ, முஸ்லிம்களையோ வெளியேறுமாறு கோரவில்லை.
போரினால் வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட சிங்களவர்கள் மீண்டும் அங்கு குடியேற அனுமதிக்கப்பட வேண்டும்.
விக்னேஸ்வரனுக்கு அரசாங்கம் ஊக்கமளிக்கிறது. எதிர்காலத்தில் சிங்கள விக்னேஸ்வரன் எவரும் பிறந்தால் அதற்கு, சிறிலங்கா அதிபரும், பிரதமருமே பொறுப்பேற்க வேண்டியிருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.