இன்று நாட்டில் நிலவும் இந்த அரசியல் நெருக்கடி வெறுமனே அரசியலை மட்டுமே பாதிக்கவில்லை நாட்டின் பொருளாதாரத்திலும் பாரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஒரு மாத காலத்தில் மாத்திரம் சுற்றுலாத்துறை வருவாய் 20 வீதத்தால் குறைவடைந்துள்ளது.கடன் நெருக்கிக்கொண்டுள்ளது. வாங்கிய சர்வதேச கடனுக்கான வட்டி 3 வீதத்தால் அதிகரித்துள்ளது.
இவை அனைத்தும் மக்கள் மீதே இறுதியில் விழும்என ஐக்கிய தேசிய முன்னணியின் உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
குடியரசின் நிதியில் இருந்து அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் அவர்களது தனிப்பட்ட பணியாட் தொகுதியினருக்கான நிதி கட்டுப்பட்டு பிரேரணை யை இன்று வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் முன்மொழிந்து உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் கூடுகையில்.
ஆனால் ஜனாதிபதியும் அவரது கூட்டணியும் அதிகாரத்தை கையில் வைத்துகொண்டு தாம் ஆட்சி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே உள்ளனர். நாம் தேர்தல் ஒன்றினை நடத்த வேண்டாம் என கூறவில்லை.
ஆனால் இவ்வாறு சட்டவிரோதமாக ஆட்சியை கைவில் வைத்துகொண்டு தேர்தலை நடத்துவது நாம் ஏற்றுகொள்ளவில்லை.
இவ்வாறு தேர்தலுக்கு சென்றால் ராஜபக் ஷக்களின் அடாவடித்தனம் மூலமாக தேர்தல் ஜனநாயக ரீதியில் இடம்பெறாது போய்விடும்.
ராஜபக்ஷக்களுக்கு இன்று அதிகார வியாதி ஒன்று ஏற்பட்டுள்ளது. அதனால் தான் இவர்கள் அதிகார மோகத்தில் நாட்டினை நாசமாக்கி வருகின்றனர்.கோத்தாபயவின் நிருவாகமே இன்று இடம்பெற்று வருகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.