விண்ணிலும் மண்ணிலும் போராடி கடலிலும் கரையிலும் களமாடி, விளைநிலத்துக்காக வித்தாகிப் போன புனிதர்களை நினைவுகூர்ந்து ஒன்றாக அவர்களுக்கு வணக்கம் செலுத்தும் நாள் நவம்பர் 27.தமிழீழ விடுதலைக்காக தம்முயிரை அர்ப்பணம் செய்த மாவீரர்களுக்கான உயரிய நாள் இது.
தேசிய மாவீரர் நாள் 2018 யேர்மனியில் Dortmund நகரில் சிறப்பாக நடைபெற்றது . பொதுச்சுடர் ஏற்றப்பட்டு , தேசியக்கொடி ஏற்றலுடன் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வுகளை தொடர்ந்து மாவீரர்களின் வணக்க நிகழ்வுகள் தொடர்ந்தன .தமிழீழ தேசியத் தலைவரின் 2008 ஆம் ஆண்டின் தேசிய மாவீரர்நாள் உரை ஒளி பரப்பப்பட்டதுடன் தாயக நேரம் 18:05 மணியளவில் மணியோசையுடன் தமிழீழத்தின் விடிவிற்காகவும் உயிரைத் தற்கொடையாக ஈய்ந்து இந்த மண்ணிற்கே உரமாகி விட்டவர்களுக்கான ஈகைச்சுடர் மாவீரரின் சகோதரனால் ஏற்றப்பட்டு , துயிலுமில்லப் பாடல் ஒலிபரப்பப்பட்டு மாவீரர் திருவுருவப்படங்களிற்கு தீபமேற்றப்பட்டு , கார்த்திகை பூக்களின் காட்சியுடன் அகவணக்கத்துடன் மிகவும் சிறப்பாக அமைக்கப்பட்ட அரங்கத்தில் நிகழ்வுகள் அனைத்தும் உணர்வெழுச்சியுடன் ஆரம்பிக்கப்பட்டது.
தமிழீழ விடுதலைக்காய் தம்மை விதையாக்கி சென்ற மாவீரர்களின் குடும்ப உறவுகளுக்கான மதிப்பளிப்பு இயக்க மரபின் அடிப்படையில் மாவீரர் நிகழ்வு மண்டபத்தில் காலை 10:30 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்த நூற்றிற்கும் மேற்பட்ட யேர்மன் வாழ் உறவுகள் கலந்துகொண்டு தமது காவல்தெய்வங்களை வணங்கினார்கள்.
மண்டபத்தில் மாவீரர்களுக்கான வணக்க நிகழ்வுகள் நடைபெற்ற சமநேரத்தில் Essen நகரத்தில் அமையப்பெற்றுள்ள மாவீரர் தூபிக்கு முன்னாலும் தாயக நேரம் 18:05 மணியளவில் மணியோசையுடன் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அக்காட்சியை மண்டபத்தில் நேரடியாக அகன்ற திரையில் ஒளிபரப்பப்பட்டது உணர்வுபூர்வமாக காட்சியளிகப்பட்டது.
மாவீரர்களுக்கான இசைவணக்கத்தை தொடர்ந்து , எழுச்சி நடனங்கள் , கவிதைகள் , மற்றும் 120 க்கும் மேலான நாட்டிய நடன மாணவச் செல்வங்கள் கலந்துகொண்டு அமையபெற்ற “போரின் வலிகள்” நாட்டிய நாடகமும் மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது.
தேசிய மாவீரர் நாளில் வருகை தந்திருந்த கள மருத்துவப் போராளி வண்ணன் அவர்கள் ,தனது சிறப்புரையில் தமிழீழ விடுதலைப் போராட்டம் என்பது , மக்களின் விடுதலைக்காக மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த தமிழினத்தின் இருப்புக்காகவும், அத்தோடு எமது போராட்டம் நிச்சயம் வெல்லும் எனும் கருப்பொருளுக்கு அமைய தனது உரையை ஆற்றி இருந்தது மண்டபத்தில் உணர்வோடு சங்கமித்து இருந்த மக்களின் மனதில் நம்பிக்கையை உருவாக்கியது.அத்தோடு அவர் தனது உரையில் ஒவ்வொரு மாவீரர்களும் இறுதி மூச்சுவரை தமிழீழ மக்களுக்காக செய்த யாருமே அறிந்திராத உன்னத தியாகத்தையும் ஈகத்தையும் எடுத்துரைத்தார்.
நிகழ்வில் மாவீரர் நினைவு சுமந்த சிறப்பு வெளியீடுகள் வெளியிட்டு வைக்கப்பட்டதோடு , இம்முறை சிறப்பு வெளியீடாக 27.12.1982 முதல் 31.12.1995 வரை எமது தேசத்திற்காக தம்மை ஈகம் செய்த மாவீரர்களின் விபரங்கள் உள்ளடங்கப்பெற்ற “தமிழீழத் தேசிய மாவீரர் பெட்டகம்” முதலாவது தொகுதியாக வெளியிடப்பட்டதோடு , தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனியின் ஒருங்கிணைப்பில் வெளியிடப்பட்ட ” கார்த்திகை தீபம் ” இதழ் 5 தும் மக்களிடம் அறிமுகம் செய்யப்பட்டது.
நிகழ்வின் நிறைவாக ‘நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்’ என்ற பாடலை அனைவரும் இணைந்து பாடியதோடு , தமிழீழத் தேசியக்கொடி இறக்கப்பட்டு, ‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’ என்ற தாரக மந்திரத்தை உரத்து உச்சரித்ததோடு நிகழ்வுகள் யாவும் மாவீரம் நிறைந்த மனதுடன் நிறைவுபெற்றன.
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – யேர்மனி