கருவில் மரபணுவை மாற்றி குழந்தை பிறக்க வைக்கும் ஆராய்ச்சி நிறுத்தம் – சீன விஞ்ஞானி

326 0

உலகளவில் சர்ச்சை எழுந்ததை அடுத்து கருவில் மரபணுக்களை மாற்றி அமைத்து. குழந்தை பிறக்க வைக்கும் ஆராய்ச்சியை நிறுத்தி விட்டதாக சீன விஞ்ஞானி அறிவித்துள்ளார்.

இந்தியாவில் சில ஆண்டுகளுக்கு முன்னர் மரபணு மாற்றியமைக்கப்பட்ட கத்தரிக்காய் பற்றி பரபரப்பாக பேசப்பட்டது. மரபணுக்கள் மாற்றியமைக்கப்பட்ட காய்கறிகளை விளைவித்தால், அதை சாப்பிடுகிற மனிதர்களுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என கூறி பலத்த எதிர்ப்பு கிளம்பியது.

இந்தநிலையில் சீனாவை சேர்ந்த ஒரு விஞ்ஞானி, கருவில் மரபணு மாற்றியமைக்கப்பட்ட குழந்தைகளை உருவாக்கி பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.அந்த விஞ்ஞானி, சீனாவின் ஷென்ஜென் நகரில் உள்ள சதர்ன் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஹீ ஜியான்குய்.

இந்த வாரத்தின் தொடக்கத்தில் அவர், எச்.ஐ.வி. வைரஸ் தாக்காமல் தடுப்பதற்காக தான் கருவில் மரபணு மாற்றம் செய்து 2 குழந்தைகளை பிறக்க வைத்துள்ளதாக அறிவித்தார். குறிப்பாக பெண் சினை முட்டையும், ஆணின் உயிரணுவும் இணைந்து கருத்தரித்த நிலையில் அந்த கருவின் மரபணுக்களில் இருந்து ‘சிசிஆர்5’ என்ற மரபணுவை நீக்கி இந்த குழந்தைகளை பிறக்க வைத்துள்ளார். இந்த குழந்தைகளின் தந்தைக்கு எச்.ஐ.வி. தொற்று உள்ளது. தாய்க்கு இல்லை.

இப்படி மரபணு மாற்றி குழந்தை பிறக்க வைப்பது தொடர்பான ஆராய்ச்சிக்கு பெரும்பாலான நாடுகள் தடை செய்துள்ளன.

இந்த நிலையில் விஞ்ஞானி ஹீ, இவ்வாறு செய்திருப்பதை அறிந்து உலகளவில் விஞ்ஞானிகள் கண்டனம் தெரிவித்து, தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்துள்ளனர். இது பயங்கரமானது என அவர்கள் கூறி உள்ளனர்.

சீன விஞ்ஞானிகளே, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு கடிதம் எழுதி அதில் கையெழுத்திட்டு சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். தயக்கமின்றி இதை எதிர்ப்பதாக அவர்கள் கூறி உள்ளனர்.

மேலும் ஹீ பணியாற்றி வருகிற சதர்ன் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், “இந்த ஆராய்ச்சி திட்டம் பற்றி எங்களுக்கு தெரியாது. இது குறித்து விசாரணை நடத்துவோம்” என கூறி உள்ளது.

இங்கிலாந்தில் உளள புகழ் பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜூலியன் சவுலெஸ்கு கருத்து தெரிவிக்கையில், “மரபணு மாற்றம் என்பது இப்போது ஆராய்ச்சியளவில்தான் உள்ளது. இந்த நிலையில் கருவில் மரபணு மாற்றி குழந்தை பிறப்பிக்கச் செய்வது, பிற்காலத்தில் மரபணு ரீதியிலான பிரச்சினைகளை ஏற்படுத்துவதற்கு வாய்ப்பு உண்டு. புற்றுநோய் தாக்கவும் வாய்ப்பு உண்டு” என்று கூறினார்.

இந்தநிலையில் ஹாங்காங் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மனித மரபணு மாற்ற உச்சி மாநாட்டில் விஞ்ஞானி ஹீ கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், மரபணு மாற்றி தான் பிறக்க வைத்துள்ள குழந்தைகளுக்கு லுலு, நாநா என்று பெயரிட்டுள்ளதாகவும், அந்தக் குழந்தைகள் இயல்பாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதாகவும் தெரிவித்தார். அடுத்த 18 ஆண்டுகளுக்கு அந்த இரட்டை குழந்தைகளை கண்காணிக்க திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் பேசும்போது, “கருவில் மரபணு மாற்றி குழந்தை பிறப்பிக்கச்செய்வதற்காக நான் 8 தம்பதியரை தேர்வு செய்திருந்தேன். பின்னர் அவர்களில் ஒரு தம்பதியரை விட்டு விட்டேன். 7 தம்பதியரில் கணவர்களுக்கு எச்.ஐ.வி. தொற்று உள்ளது. மனைவிகளுக்கு எச்.ஐ.வி. தொற்று கிடையாது. அவர்கள் தாமாகவே முன்வந்து இந்த சோதனையில் ஈடுபடுவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். இந்த ஆராய்ச்சி தொடர்பாக முன்னணி அறிவியல் பத்திரிகைக்கு ஆய்வறிக்கை சமர்ப்பித்துள்ளேன்” என கூறினார்.

இந்தநிலையில் தொடர் எதிர்ப்புகளால் கருவில் மரபணு மாற்றி குழந்தை பிறக்க வைக்கும் ஆராய்ச்சியை நிறுத்தி விட்டதாக விஞ்ஞானி ஹீ நேற்று அறிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் ஹாங்காங்கில் கூறும்போது, “எதிர்பாராத விதமாக இந்த ஆராய்ச்சி முடிவு வெளிவந்து விட்டது. அதற்காக மன்னிப்பு கோருகிறேன். தற்போதைய சூழலில் அந்த ஆராய்ச்சியை நான் நிறுத்தி விட்டேன்” என்று குறிப்பிட்டார்.

Leave a comment