ஆயிரம் ரூபாவிலிருந்து பின்வாங்க தயாரில்லை!ஆறுமுகன் தொண்டமான்

316 0

மலையகமெங்கும் இடம்பெற்ற சம்பள உயர்வு போராட்டங்களின் அழுத்தம் காரணமாக நிதி அமைச்சின் செயலாளர்  எனக்கு தொடர்பு கொண்டு  இன்றைய போராட்டத்தை பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றதாக தெரிவித்துள்ளார்.

அத்தோடு  தொடர்ந்து பெருந்தோட்ட கம்பனிகளின் நிறைவேற்று அதிகாரிகளுடன் (CEO) பேச்சிவார்தையில் ஈடுப்பட்டு பயனில்லை, எனவே  எதிர்வரும் புதன்கிழமை பெருந்தோட்ட கம்பனிகளின் உரிமையாளர்களை அழைத்து பிரதமரின் தலைமையில் பேச்சுவார்த்தை ஒன்றை ஏற்பாடு செய்ய பிரதமர் பணிந்துள்ளதாகவும் நிதி அமைச்சின் செயலாளர், தனக்கு தொலைபேசியூடாக தெரிவித்ததாக மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான்  தெரிவித்தார்.

மனித சங்கிலி போராட்டம் மலையகமெங்கும் முன்னெடுக்கப்பட்டது தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் ஊடக சந்திப்பு ஒன்று கொட்டகலை தொண்டமான் தொழிற்பயிற்சி நிலைய காரியாலயத்தில் இடம்பெற்றது.

இதன்போது ஊடகத்திற்கு கருத்து தெரிவித்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துரைக்கையில்,

ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு வேண்டி கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலும், அரசாங்கத்திற்கு மக்களின் பலத்தை நிரூபிக்கும் வகையிலும் மத்திய, ஊவா ஆகிய மாகாணங்களில் உள்ள மாவட்டங்களிலும், களுத்துறை, இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 8 மணி முதல் மதியம் ஒரு மணி வரை மனித சங்கிலி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த மனித சங்கிலி போராட்டத்திற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரசோ மற்றும் ஏனையவர்களே உரிமை கோர முடியாது. இது மக்களால் முன்னெடுக்கப்பட்ட ஒரு போராட்டமாகும்.

இன்றைய போராட்டம் மிக சிறப்பாகவும், அமைதியாகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டமை பெருமைக்குரிய விடயமாகும். இதில் பங்கு கொண்ட தொழிலாளர்கள் மற்றும் இதற்கு ஆதரவாக செயற்பட்ட வர்த்தக நிலைய உரிமையாளர்கள் என பலருக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.

தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்று நாட்டின் பல பாகங்களிலும், ஆசிரியர்கள், பல்கலைகழக மாணவர்கள், இளைஞர்கள் என பலரும் போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர்.

ஆயிரம் ரூபாய் அடிப்படை என்பது தோட்ட தொழிலாளர்களுக்கு இன்று அவசியமான ஒன்றாகும்.

கட்சி, இன, மத, மொழி வேறுபாடுகள் அற்றவகையில் அணைவரும் இதனை ஏற்றுக்கொண்டு போராட்டங்களை நடத்தி வருகின்றார்கள். அதேநேரத்தில் கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலும், அரசுக்கு மக்களின் பலத்தை உணர்த்தும் வகையிலும் இந்த போராட்டம் இன்று அமைந்துள்ளது.

போராட்டம் ஆரம்பமே தவிர முடிவல்ல. சம்பளம் தொடர்பில் ஓர் இரு நாட்களில் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது. அதன்பின் ஏனைய முடிவுகளை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எடுக்கும் என தெரிவித்த அமைச்சர்,

ஆயிரம் ரூபா சம்பள விடயத்தில் அரசுக்கு வழங்கும் ஆதரவிலிருந்து விலகவும் தயார். ஆனால் அவ்வாறு விலகினால் இன்றைய அரசியல் சூழ்நிலையில் யாரிடம் சென்று பேசுவது. ஆகையினால் அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு எடுக்க இ.தொ.கா தயாராகவுள்ளது. ஆயிரம் ரூபாவிலிருந்து பின்வாங்கி செல்லாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a comment