புயலை பற்றி யாரும் எங்களுக்கு பாடம் எடுக்க தேவையில்லை – அமைச்சர் ஜெயக்குமார்

308 0

புயலை பற்றி யாரும் எங்களுக்கு பாடம் எடுக்க தேவையில்லை என்று புதுக்கோட்டையில் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் கடலோர பகுதிகளில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களையும், புயலால் பாதிக்கப்பட்ட படகுகளையும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோட்டைப்பட்டினம் விசைப் படகு மீனவர் சங்கத்தினரை சந்தித்து அவர்களின் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டதுடன், கட்டுமாவடி, பிள்ளையார்திடல், வடக்கு புதுக்குடி உள்ளிட்ட இடங்களில் நிவாரண உதவிகளை வழங்கிய பின்னர் ஜெகதாப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தையும் பார்வையிட்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது :-

கடலோர பகுதிகளில் புயலுக்கு முன்னரே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் நிவாரண பணிகளில் எந்த தயக்கமும் ஏற்படவில்லை. புயல் பாதித்த பகுதிகளில் தொடர்மீட்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் படகுகள் குறித்த பல்வேறு சேத விபரங்கள் கணக்கெடுக்கப்பட்டு வருவதுடன் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய நிவாரணம் வழங்கப்படும்.

புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை மத்திய குழு ஆய்வு மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் 7ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் புயலால் பாதிக்கப்பட்டுள்ளன. அனைத்து கிராமங்களுக்கும் மத்திய குழு ஆய்வுக்கு செல்ல முடியாது. அதிகமாக பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்து விரைவில் அதற்கான அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்தால்தான் நிதியும் விரைவாக கிடைக்கும்.

 

தமிழக அரசு கோரியப்படி ரூ.15ஆயிரம் கோடியை மத்திய அரசு வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இதற்கு முன்பு இயற்கை பேரிடர் காலங்களில் நிவாரணம் வழங்கியதில் பின்பற்றியதை இம்முறை மத்திய அரசு பின்பற்றாது என நம்புகிறோம்.

விவசாய கடன் தள்ளுபடி என்பது அரசின் கொள்கை முடிவு.அதை தமிழக முதல்வர் முடிவு செய்வார். தமிழக அமைச்சர்கள் மக்களோடு மக்களாக உள்ளனர். மக்களை அமைச்சர்கள் சந்திக்கவில்லை என்று விமர்சிப்பவர்கள் வானத்தில் இருந்து குதித்தவர்கள் போன்று பேசக்கூடாது. எதிர்க்கட்சிகள் இதில் அரசியல் செய்யக்கூடாது. புயலில் இருந்து மீனவவ்களை காப்பாற்றி உள்ளோம். பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு விரைவில் நிவாரண தொகை வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது அப்போது அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

தானே. வர்தா. ஒக்கி என‌ பல புயல்களில் பயிற்சி எடுத்தவர்கள் நாங்கள். யாரும் எங்களுக்கு பாடம் சொல்லிக்கொடுக்க வேண்டாம். ஜெயலலிதா இருந்த போதிலிருந்தே பல விமர்சனங்களை சந்தித்தவர்கள் நாங்கள். இது அரசியல் ஆக்குவதற்கான களம் அல்ல. கஜா‌ புயல் மீட்புக்குறித்து எதிர்க்கட்சிகள் ஆலோசனைகள் வழங்கலாம். மக்களை தூண்டி விட்டு அரசியல் செய்யக் கூடாது.

கஜா புயல் மீட்புக்கு அனைத்து கட்சி கூட்டம் கூட்ட‌ அவசியம் இல்லை. மக்களுக்கு உதவி செய்ய ஸ்டாலினை யாரும் தடுக்கவில்லை. 2 லாரிகளில் நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்து விட்டு ஓடி ஒளியும் ஆட்கள் இல்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையாக நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றோம், மக்களோடு மக்களாக இருக்கின்றோம். யாரும் எங்களுக்கு அறிவுரை சொல்ல தேவையில்லை. அவரவர்கள் வேலையை பார்த்தாலே போதும். நாங்கள் எங்கள் வேலையை பார்த்து வருகிறோம். மக்கள் அமைச்சர்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள் என்று கூறுவது திட்டமிட்ட சதி. இந்த சதியை ஒரு குழுவாக இருந்து செயல்படுத்துகிறார்கள். இதற்கெல்லாம் அஞ்சுபவர்கள் நாங்கள் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment