உலகம் முழுவதும் இந்திய தூதரகங்களில் 48 மணி நேரத்துக்குள் பாஸ்போர்ட் வழங்கப்படும் என்று மத்திய மந்திரி வி.கே.சிங் தெரிவித்தார்.
மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி வி.கே.சிங், அமெரிக்காவில் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் ‘பாஸ்போர்ட் சேவா’ திட்டத்தை தொடங்கி வைத்தார். பிறகு அவர் பேசுகையில், “இந்திய தூதரகங்களில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகங்கள், இந்தியாவில் உள்ள டேட்டா மையத்துடன் டிஜிட்டல் முறையில் இணைக்கப்பட்டு உள்ளன.
இதனால், அங்கு பாஸ்போர்ட் வழங்கும் பணிகள் வேகமாக நடைபெறும். கடந்த வாரம், நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகத்தில், 48 மணிக்கும் குறைவான நேரத்தில் பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. விரைவில், உலகம் முழுவதும் உள்ள இந்திய தூதரகங்களிலும் இது நடக்கப்போகிறது. இன்னும் சில மாதங்களில், புதிய வடிவமைப்பிலான பாஸ்போர்ட்டுகளை இந்திய அரசு வழங்கும்” என்று கூறினார்.