கூட்டணி குறித்து முக ஸ்டாலின் தான் பதிலளிக்க வேண்டும்- வைகோ

349 0

கூட்டணி குறித்து துரைமுருகன் கூறிய கருத்துக்கு முக ஸ்டாலின் தான் பதில் அளிக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் கடந்த சில நாட்களுக்கு முன்பு அளித்த பேட்டியில், தி.மு.க.வுடன் உள்ள கூட்டணி கட்சிகள் குறித்து கருத்து தெரிவித்திருந்தார். இப்போது தி.மு.க.வுடன் உள்ள கட்சிகள் கடைசி நேரத்தில் விலகலாம். தி.மு.க.வை இதுவரை எதிர்த்து வருபவர்கள் கடைசி நேரத்தில் உள்ளே வரலாம் என்றும் , ம.தி.மு.க. மற்றும் விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகள் தி.மு.க.வுடன் நட்புடன் உள்ளனர் என்றும் அதில் தெரிவித்திருந்தார்.

இது தி.மு.க. கூட்டணி கட்சிகள் மத்தியில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்தநிலையில் புதுக்கோட்டைக்கு இன்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வந்தார். கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட செல்லும் முன்பு விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் பிறந்தநாளையொட்டி அவரது உருவபடத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

அப்போது வைகோவிடம் நிருபர்கள் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் கூறிய கருத்து குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு வைகோ கூறியதாவது:-

கூட்டணி குறித்து தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் கூறிய கருத்து ம.தி.முக.வினருக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தான் முடிவு கூற வேண்டும். நாங்கள் கூட்டணியில் இருக்கிறோமா என்பதற்கு அவர் தான் பதில் கூற வேண்டும்.

இந்தியாவை பாரதிய ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ்.சும் ரத்த களரியாக்கப்பார்க்கிறது. வரும் பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா பிரதமர் வேட்பாளராக நிதின் கட்காரியை அறிவிக்க உள்ளது.

கஜா புயல் பாதிப்பால் ஏராளமான விவசாயிகள், மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இதுவரை மத்திய அரசு வெறும் 4 சதவிதம் மட்டுமே நிவாரணம் வழங்கியுள்ளது. பட்டேல் சிலையை அமைக்க 3 ஆயிரம் கோடி செலவு செய்துள்ளனர். ஆனால் விவசாயிகளுக்கு கொடுக்க தயங்குகிறார்கள். மத்திய அரசு தூக்கி எறியப்படவேண்டிய அரசு இவ்வாறு வைகோ கூறினார்.

முன்னதாக நேற்று புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்டத்திற்குட்பட்ட முள்ளூர், பெருங்களூர், ஆதனக்கோட்டை, சோத்துப்பாளை, சொக்க நாதப்பட்டி, வளவம்பட்டி ஆகிய பகுதிகளை பார்வையிட்ட அவர், பொதுமக்களுக்கு ஆறுதல் கூறி, நிவாரண உதவிகளை வழங்கினார்.

கஜா புயலால் இறந்தவர்களுக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். விவசாயத்தை பற்றி தமிழக முதல்-அமைச்சருக்கு ஒன்று தெரியாது. எட்டு வழிச்சாலைக்கு ரூ.50 ஆயிரம் அறிவித்து விட்டு, புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரத்திற்கு ரூ.1100 அறிவித்தால் நியாயமா?. ஒரு ஏக்கர் வாழை மரத்திற்கு ரூ.45 ஆயிரம் கொடுக்க வேண்டும். தென்னை மரத்திற்கு ரூ.50 ஆயிரமும், மரத்தை அகற்ற ரூ.2 ஆயிரமும் வழங்க வேண்டும். ஒரு ஏக்கர் நெல்லுக்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும். புயலில் வீடு இழந்தவர்களுக்கு அரசு ரூ.3 லட்சத்தில் வீடு கட்டி கொடுக்க வேண்டும். தேக்கு மரத்திற்கு ரூ.75 ஆயிரம் கொடுக்க வேண்டும். மீட்பு பணியில் உயிரை கொடுத்து பணியாற்றி கொண்டிருக்கும் மின்சார ஊழியர்களுக்கும், மாவட்ட கலெக்டர்களுக்கும் மற்றும் அரசு துறை அதிகாரிகளுக்கும் நான் தலை வணங்குகிறேன்.

புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு நாங்கள் தனி அறிக்கையை தயாரித்து வருகின்றோம். நான் யாரையும் குறை சொல்லவும், விமர்சனம் செய்யவும் வரவில்லை. தமிழகத்திற்கு புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ரூ.25 ஆயிரம் கோடி மத்திய அரசு நிதி வழங்க வேண்டும். அப்படி வழங்கவில்லை என்றால் பிரதமர் மோடியை தமிழகத்திற்குள் அனுமதிக்க மாட்டோம். தமிழகத்திற்குள் எந்த பகுதிக்கு பிரதமர் மோடி வந்தாலும் நாங்கள் கருப்பு கொடி காட்டுவோம். தற்போது புயல் பாதித்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு இருக்கும் மத்திய குழு ஒரு அயோக்கிய குழு. தமிழக அரசிற்கு முதுகெலும்பு போய் 2 ஆண்டுகள் ஆகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment